போர் வராமல் இருக்க வேண்டுமா ? உடனே படைகளை வாபஸ் பெற வேண்டும்….தொடர்ந்து மிரட்டி வரும் சீனா !!!

First Published Aug 8, 2017, 8:19 AM IST
Highlights
china warning to india


சிக்கிம் எல்லையில் மோதலைத் தடுக்க வேண்டும் என்றால், உடனடியாக இந்தியா எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிக்கிம் பகுதியில் இந்தியா, சீனா, பூடான் எல்லைகளின் முச்சந்திப்பில் டோக்லாம் உள்ளது. இதில் சீன ராணுவம் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டது. 

இது ஒரு தலைப்பட்சமானது, எல்லை பிரச்சினையில் தீர்வு காணுகிற வரையில், தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை மீறுவதாகும் என இந்தியா ஆட்சேபம் தெரிவித்தது.

இந்நிலையில் சீன ராணுவம் அத்துமீறி அடாவடியாக சாலை அமைக்கத் தொடங்கியது. இதனால்  வட கிழக்கு மாநிலங்களை நாம் சென்றடைவதை துண்டித்து விடும் என இந்தியா அஞ்சுகிறது. சீனாவின் நடவடிக்கைக்கு பூடானும் எதிர்ப்பு தெரிவித்தது. 

எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா, தனது ராணுவத்தை குவித்தது. இந்தியாவும் படைவீரர்களை குவித்தது. இதன் காரணமாக எல்லையில் கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. 

இந்த நிலையில் சீன அரசு, பீஜிங் அருகேயுள்ள ஹூரைராவு ராணுவ பயிற்சி முகாமுக்கு இந்திய பத்திரிகையாளர்களை அழைத்து சென்றது. பின்னர் சீன அரசு, அங்கு தனது ராணுவ பலத்தை காண்பிக்கும் வகையில்  பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டியது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீன ராணுவ உயர் அதிகாரி கர்னல் லி , இந்திய படையினர் அத்துமீறி நுழைந்திருப்பது, சீனா எதிர்பார்க்காத ஒன்று. இரு தரப்புடனும் சர்ச்சைக்கு அப்பாற்பட்டதாக கருதப்பட்ட எல்லையில் உள்ள ஒரு பகுதியினுள் அத்துமீறியது, ஏற்றுக்கொள்ள முடியாதது என கூறினார். 

மேலும் சிக்கிம் எல்லையில் மோதலைத் தடுக்க வேண்டும் என்றால், உடனடியாக இந்தியா எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் படைகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

 

click me!