இந்தியாவுக்கு சீனா பகிரங்க மிரட்டல்...!!!

First Published Jul 7, 2017, 7:10 PM IST
Highlights
China has publicly threatened India that it will have to give support to Sikkim


சிக்கிம் மாநிலத்தை தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று இந்தியாவுக்கு சீனா பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது.

இந்தியா- சீனா இடையே ஏற்பட்டுள்ள எல்லைப் பிரச்னையை மையமாக வைத்து சீன அரசுப் பத்திரிகையான 'குளோபல் டைம்ஸ்' தொடர்ந்து இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகிறது.

அப்பத்திரிகையில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-

முன்பு தலாய் லாமா விவகாரத்தை வைத்து சீனாவுக்கு இந்தியா நெருக்கடி அளித்து வந்தது. ஆனால், இப்போது திபெத் விவகாரம் முடிந்துபோன கதையாகி விட்டது.

அதே நேரத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் சீனாவும் பல்வேறு விவகாரங்களைக் கையில் எடுக்க முடியும்.

உதாரணமாக, கடந்த 2003- ஆம் ஆண்டு இந்திய - சீன எல்லை வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்ட போதுதான் சிக்கிமை இந்திய மாநிலங்களில் ஒன்றாக சீனா அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது.

இப்போது அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு சிக்கிமை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சீனா ஆதரவு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சிக்கிம் பகுதியை தனிநாடாக்க வேண்டும் என்பதற்கு சீன மக்கள் தரப்பில் ஆதரவு உள்ளது. இது பரவும்போது சிக்கிம் பகுதியிலும் தனிநாடு கோரிக்கை வலுவடையும். ஏனெனில், சிக்கிம் மக்களுக்கு தாங்கள் தனிநாடாக இருந்த வரலாறு நன்கு தெரியும்.

அதனைக் காக்க வேண்டும் என்பதை அவர்களும் விரும்புவார்கள். மேலும், தலாய் லாமாவை இந்தியா தொடர்ந்து பாதுகாத்து வரும் நிலையில் அதற்கு பதிலடியான சீனாவின் நடவடிக்கையாகவும் சிக்கிம் விவகாரம் அமையும்.

ஆசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற எண்ணத்தை இந்தியா கைவிடாவிட்டால் அந்நாட்டுக்கு எதிராக கடும் நிலைப்பாட்டை நாங்கள் எடுப்போம். மேலும், சுதந்திர நாடான பூடானை இந்தியா தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்துள்ளது.

எனவே, அந்த நாடு சீனாவுடன் தூதரக உறவு வைத்துக் கொள்ளவில்லை. முன்பு சிக்கிம் பகுதியையும் இதே போன்ற நடவடிக்கை மூலம்தான் இந்தியா தனது மாநிலமாக்கிக் கொண்டது என்று சீனா குற்றம்சாட்டியுள்ளது.

சுதந்திரமாக இருந்த பல சிறிய நாடுகளை ராணுவ பலத்தைப் பயன்படுத்தி இந்தியா கைப்பற்றி தனது நாட்டின் பரப்பளவை அதிகரித்துக்கொண்டது என்பது வரலாற்று உண்மை.

1975- ஆம் ஆண்டு வரை சுதந்திர நாடாக இருந்த சிக்கிம் பகுதியை, இந்தியா ஆக்கிரமித்து பொதுவாக்கெடுப்பு என்ற பெயரில் தங்கள் நாட்டின் ஒருபகுதியாக மாற்றிக் கொண்டது.

பிரிட்டன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட பிறகு, ராணுவ பலத்தின் மூலம்தான் பல சிற்றரசுகளை இந்தியா தன்வசப்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, இந்தியா தனது நியாயமற்ற செயல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தொடக்கத்தில் இருந்து இப்போது வரை ராணுவ பலம், தொழில்நுட்பம், பொருளாதாரம் என அனைத்துத் துறைகளிலும் சீனாவைவிட இந்தியா பின்தங்கிதான் உள்ளது என்ற உண்மையை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இந்தியாவுடன் எப்போதும் நல்லுறவையும், ஒத்துழைப்பையும்தான் சீனா விரும்புகிறது.

இவ்வாறு அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!