
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி கேண்டீன்களிலும் மாணவர்களின் உடல் நலத்தை கெடுக்கும் ‘பேக்கிங் உணவுகளான’ பீட்சா, நூடுல்ஸ் போன்றவற்றை விற்பனை செய்ய மாநில அரசு திடீர் தடை விதித்தது.
அதற்கு மாற்றாக காய்கறிகிச்சடி, அரிசி சாதம், இட்லி, வடை உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.
தடை பொருட்கள்
அதிக உப்பு, இனிப்பு, கொழுப்பு கொண்ட உணவுப்பொருட்களை பள்ளிகளில் விற்பனை செய்யக்கூடாது என்று மாநிலஅரசு நேற்று முன்தினம் அறிவிக்கை வௌியிட்டது. அதன்படி, ‘ உருளைக்கிழங்கு சிப்ஸ், நூடுல்ஸ், குளிர்பானங்கள், பீட்சா, பர்கர், கேக், பிஸ்கட், பன், ரசகுல்லா, குலாப் ஜாமுன், பேடா, காலாகண்ட், பானி-பூரி, சாக்லேட்ஸ், ஜாம், ஜெல்லி உள்ளிட்ட 12 வகையான உணவுப்பொருட்களை பள்ளி கேண்டீன்களில் மாணவ, மாணவிகளுக்கு விற்பனை செய்யக்கூடாது.
சாப்பிடலாம்
அதேசமயம், கோதுமை ரொட்டி, காய்கறி புலாவ், இட்லி, வடை, இளநீர், பருப்புவகைகள்,கோதுமை ஹல்வா,பால், பால்பொருட்கள், லஸ்ஸி, மோர், காய்கறி சான்ட்விட்ஜ் உள்ளிட்ட 20 வகையான உணவுகளை விற்பனை செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் படிக்கும் குழந்தைகள் சத்தான உணவு உண்ண ஊக்குவிக்க வேண்டும், ‘ஜங்க்புட்ஸ்’களை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஐதராபாத்தில் உள்ள தேசிய சரிவிகித சத்துணவு நிறுவனம் இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இதற்காக மத்திய அரசு, ஒரு இயக்குநர் தலைமையில் குழு நியமித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த குழுவின் அறிக்கையின்படி, ‘ஜங்க்புட்ஸ்’களில் அதிகபட்சமான கொழுப்புகள், உப்பு, சர்க்கரை கலந்துள்ளது. அதேசமயம், சத்துக்கள் மிகக் குறைவாக இருக்கின்றன. இவற்றை குழந்தைகள் தொடர்ந்து சாப்பிடும்போது, உடல்பருமன், பற்களில் பிரச்சினைகள், சர்க்கரை நோய், இதயக்கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகள் உருவாகும் என அறிக்கை அளித்தது.
இந்த குழுவின் அறிக்கையையடுத்து, பள்ளி கேண்டீன்களில் ‘ஜங்க்புட்ஸ்’ விற்பனைக்கு தடைவிதித்து மஹாராஷ்டிரா அரசு உத்தரவிட்டது.