
மத்தியப் பிரதேச மாநிலத்தில், ஒரு தொடக்கப்பள்ளியில் பயிலும் குழந்தைகளை, அவர்கள் மதிய உணவு சாப்பிடும் ‘தட்டு’ மூலம், கழிவறையையும், மனித கழிவுகளையும் ஆசிரியர்கள் சுத்தம் செய்ய வைத்த கொடுமை நடந்துள்ளது.
இந்த சம்பவம் அறிந்து பெற்றோர்கள் அந்த பள்ளியை முற்றுகையிட்டதையடுத்து, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம், தமோ மாவட்டத்தில் உள்ள தோலி கிராமத்தில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் குழந்தைகளை பள்ளியின் கழிவறையை சுத்தப்படுத்த ஆசிரியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த குழந்தைகள் மதிய உணவு சாப்பிடும் தட்டு மூலம், கழிவறையில் இருந்த மனிதகழிவுகளை அகற்ற வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளை தங்களின்பெற்றோரிடம் இது குறித்து புகார் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்றுமுன்தினம் பள்ளியை முற்றுகையிட்டு குழந்தைகள் பெற்றோர் போராட்டம் நடத்தினர்.
குழந்தையின் பெற்றோரான குடு குஷ்வாலா கூறுகையில், “ கழிவறையில் இருந்த மனித கழிவுகளை, சாப்பிடும் தட்டால் தன்னையும், மற்ற குழந்தைகளைகளையும் அகற்ற ஆசிரியர் உத்தரவிட்டதாக எனது மகள் என்னிடம் புகார் கூறினார். இந்த சம்பவத்தையடுத்து பள்ளி மூடப்பட்டது. இது தொடர்பாக நாங்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்துள்ளோம் ’’ எனத் தெரிவித்தார்.
இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் கூறுகையில், “ பள்ளியை தூய்மை செய்யும் பணியில் மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர்களும் ஈடுபட்டோம். இதுபோன்று தட்டால் கழிவறையை சுத்தம் செய்ய கோரவில்லை’’ என குற்றச்சாட்டை மறுத்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரீநிவாஸ் சர்மா, விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து கலெக்டர் ஸ்ரீநிவாஸ் கூறுகையில், “ மாவட்ட கல்வி அதிகாரியிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் அறிக்கை அளித்தபின் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.