ஆபரேஷன் புளூ ஸ்டார் இந்திரா காந்தி செய்த தவறு: ப. சிதம்பரம் சர்ச்சை கருத்து!

Published : Oct 12, 2025, 02:44 PM IST
P Chidambaram, Indira Gandhi

சுருக்கம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' ராணுவ நடவடிக்கை ஒரு தவறு என்று கூறியுள்ளார். அந்தத் தவறுக்காகவே இந்திரா காந்தி தனது உயிரை விலையாகக் கொடுத்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' ராணுவ நடவடிக்கை தவறான ஒன்று என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தான் செய்த அந்தத் தவறுக்காக இந்திரா காந்தி தனது உயிரையே விலையாகக் கொடுத்தார் என்றும் சிதம்பரம் தெரிவித்திருக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டபோது இவ்வாறு பேசியுள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், "முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட 'ஆபரேஷன் புளூ ஸ்டார்' என்ற ராணுவ நடவடிக்கை தவறு. இந்த நடவடிக்கையின் விளைவாகவே அவருடைய உயிர் பறிபோனது," என்று அவர் கூறினார்.

ஆபரேஷன் புளூ ஸ்டார்

1984-ம் ஆண்டில், சீக்கியர்களின் புனிதத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த பொற்கோவிலில் பிந்த்ரன்வாலே உள்ளிட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும், ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாகவும் அப்போதைய மத்திய அரசு கூறியது. பொற்கோவிலில் இருந்து பயங்கரவாதிகளை வெளியேற்றும் நோக்கில், ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி உத்தரவிட்டார்.

பொற்கோவிலுக்குள் நடந்த இந்த நடவடிக்கை சீக்கியர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நடந்த சில மாதங்களிலேயே, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவரது மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சீக்கிய கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்தக் கலவரத்துக்கு அப்போதைய காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும், முக்கியத் தலைவர்களின் தூண்டுதலின் பேரிலேயே கலவரம் நடந்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

நாடு சுக்கு சுக்காக சிதறிவிடும்..! பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலால் சீமான் ஆவேசம்
வி.வி.ராஜேஷுக்கு லக்..! ஶ்ரீலேகாவுக்கு ஏமாற்றம்.. திருவனந்தபுரம் மேயர் ரேஸில் பாஜகவின் அதிரடி முடிவு