செயற்கை நுண்ணறிவு, ரீல்ஸ்: உயர் தொழில்நுட்பத்துடன் சத்தீஸ்கர் காங்கிரஸ் வார் ரூம்!

By Manikanda PrabuFirst Published Oct 15, 2023, 2:46 PM IST
Highlights

காங்கிரஸின் சத்தீஸ்கர் வார் ரூம் பாஜக பிரச்சாரத்தை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகி

சத்தீஸ்கர் மாநிலத்தில் நவம்பர் 7, 17ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவும், ஆளும் அரசாங்கத்தின் செயல்திறனை உயர்த்திக் காட்டவும், காங்கிரஸின் 'வார் ரூம்' சமூக ஊடக தளங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பிற உயர் தொழில்நுட்ப முறைகளை விரிவாகப் பயன்படுத்தி வருகிறது.

சமூக ஊடக தளங்களின் முக்கியத்துவம், செல்வாக்கு, அது ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றை உணர்ந்து, ரீல்ஸ் உருவாக்குபவர்கள், கண்டெண்ட் ரைட்டர்கள், வீடியோ எடிட்டர்கள் மற்றும் டெலிகாலர்கள் ஆகியோர் காங்கிரஸின் 'வார் ரூமில்' 24 மணிநேரமும் வேலை செய்கிறார்கள். பாஜக வலுவான தகவல் தொழில்நுட்பக் குழுவுடன் தேர்தல் களத்தில் இறங்குவதைக் கருத்தில் கொண்டு, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் சமூக ஊடகம் மற்றும் டிஜிட்டல் தொடர்பு தேசிய ஒருங்கிணைப்பாளர் ஆயுஷ் பாண்டே கூறுகையில், “கட்சியின் விளம்பரத்திற்காகவும், மாநில அரசின் பணிகளை எடுத்துச் செல்வதற்காகவும் பணியாற்றுவதைத் தவிர, போலிச் செய்திகளைக் கையாள்வது, அரசியல் குற்றச்சாட்டுகளை கையாள்வதற்கான பணியும் 'வார் ரூம்'-க்கு ஒதுக்கப்பட்டுள்ளது.” என்கிறார்.

'வார் ரூம்' பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட ஆயுஷ் பாண்டே, இது தேர்தல் நிர்வாகத்திற்காக நிறுவப்பட்டுள்ளது என்றார். காங்கிரஸ் வார் ரூமில், “ஒரு தனி பிரசார மேலாண்மை பிரிவு, ஒரு கீழ்மட்ட அளவிலான மேலாண்மை பிரிவு, ஒரு தரவு நுண்ணறிவு பிரிவு, ஒரு அரசியல் புலனாய்வு பிரிவு, ஒரு சமூக ஊடக மேலாண்மை பிரிவு மற்றும் ஒரு கால் செண்ட்டர் ஆகியவை உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் பிரச்சினைகள், கட்சியின் நலத்திட்ட உதவிகளை மக்களிடம் கொண்டு செல்வது ஆகியவற்றில் கீழ்மட்ட அளவிலான மேலாண்மை பிரிவினர் பணியாற்றுகின்றனர். தொகுதி அளவில் பூத்கள், அமைப்புகள் மற்றும் திட்டங்களின் பயனாளிகள் தொடர்பான தரவுகளை சேகரிக்கும் பணி, தரவு நுண்ணறிவு பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் அரசியல் விவாதத்தை முன்னெடுத்துச் செல்லவும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கவும், கட்சியின் செய்தியை மக்களுக்கு தெரிவிக்கவும், மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மேம்படுத்தவும், நடந்து வரும் பணிகளை வலுப்படுத்தவும், அரசியல் புலனாய்வு பிரிவு தங்களுக்கு உதவுவதாகவும் ஆயுஷ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.

“வார் ரூமில் ஒரு கால் சென்டர் உள்ளது, அதில் தலா 70-80 பேர் இரண்டு ஷிப்டுகளில் தொடர்ந்து வேலை செய்கிறார்கள் மற்றும் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 20000 அழைப்புகளை அவர்கள் மேற்கொள்கிறார்கள்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களை பயமுறுத்தி, வகுப்புவாதப் பிரச்சினைகளின் பக்கம் திருப்பும் உத்தியும் குணமும் பாஜகவுக்கு இருப்பதாக சாடிய அவர், மக்கள் நலனுடன் தொடர்பில்லாத உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளை மட்டுமே எழுப்புகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.

முந்தைய பாஜக தலைமையிலான முந்தைய அரசை விட எத்தனை பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் மேற்கொண்டுள்ளது என்பதை எங்களிடம் கேட்டு அவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் ஆயுஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

அவசரப்பட்ட நீதி புதைக்கப்பட்ட நீதியாகும்: மகாராஷ்டிர சபாநாயகர் கருத்து

வாட்ஸ்அப்பில் சில குறைபாடுகள் உள்ளன. அதன் மூலம் வதந்திகள் பரப்பப்படுகின்றன என்று கூறிய அவர், இதுபோன்ற போலி தகவல்களை சமாளிக்க, வார் ரூமில் போலி செய்தி கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதுபோன்ற போலிச் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணித்து சட்டப்பூர்வமாக செயல்படுகிறோம். வார் ரூமில் சுமார் 120-150 பேர் கொண்ட குழு வேலை செய்கிறது என்றும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலத்தில் 30 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. சத்தீஸ்கரில் அறிவிக்கப்பட்ட 30 வேட்பாளர்களில் 14 பேர் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தவிர, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில், மூன்று பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

click me!