சத்ரபதி சிவாஜி பயன் படுத்திய புலி நக ஆயுதம் நவம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது
பீஜப்பூர் சுல்தானின் தளபதியான அஃப்சல் கானைக் கொல்வதற்காக சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய வாக் நஹ் (புலி நக ஆயுதம்), லண்டனில் உள்ள விக்டோரியா - ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது. எஃகு இரும்பால் செய்யப்பட்ட அந்தப் புலி நக ஆயுதம் வருகிற நவம்பர் மாதம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளது.
சத்ரபதி சிவாஜி முடிசூட்டு விழாவின் 350ஆவது ஆண்டு நிறைவு இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்து முடிசூட்டு விழா நிகழ்வின் நினைவாக, மூன்று ஆண்டுகளுக்கு அவரது புலி நக ஆயுதம் இந்தியா கொண்டுவரப்படவுள்ளது.
இது தொடர்பாக, அருங்காட்சியத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட மகாராஷ்டிர கலாச்சாரத் துறை அமைச்சர் சுதீர் முங்கந்திவார் நாளை மறுநாள் லண்டன் செல்லவுள்ளார். “முதற்கட்டமாக, நாங்கள் வாக் நாக்கைக் கொண்டு வருகிறோம். நவம்பரில் அது இங்கு கொண்டு வரப்பட வேண்டும். அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறோம். அப்சல் கானை, சத்ரபதி சிவாஜி மகாராஜ் கொன்ற நினைவுநாளில் அதை கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என சுதீர் முங்கந்திவார் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம், மகாராஷ்டிர வரலாற்று நிகழ்வுடன் தொடர்புடையது என்பதால், அதன் வருகையை ஒட்டுமொத்த மாநிலமும் உணர்வுப்பூர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தெற்கு மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகத்தில் புலி நக ஆயுதம் காட்சிக்காக வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான் போல நிலவுக்கு அப்பால் செல்லும் அமெரிக்க இந்திய உறவு: ஜெய்சங்கர்!
மராட்டிய சாம்ராஜ்யத்தை நிறுவுவதற்கு, 1659 இல் நடைபெற்ற பிரதாப்காட் போரின் வெற்றி சத்ரபதி சிவாஜிக்கு திருப்புமுனையாக அமைந்தது. எண்ணிக்கையில் அதிகமாக இருந்தபோதிலும், மராட்டியர்கள் அப்சல் கான் தலைமையிலான அடில்ஷாஹி படைகளை தோற்கடித்தனர். இது சத்ரபதி சிவாஜியின் சிறந்த ராணுவ வியூகத்தை உலகிற்கு எடுத்துரைத்தது.
இதையடுத்து, அஃப்சல் கான் - சிவாஜி சந்திப்பு நடைபெற்றது. அப்போது, இருவரும் கட்டிப்பிடித்தபோது, அஃப்சல் கான் திடீரென சிவாஜியின் கழுத்தை நெருக்கி கத்தியால் தாக்க முற்பட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட சிவாஜி, தனது புலி நக ஆயுதத்தால் அப்சல் கானை கொன்றார் என்பது வரலாறு. இன்றைய மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள பிரதாப்கர் கோட்டையின் அடிவாரத்தில் அப்சல்கானை சத்ரபதி சிவாஜி கொன்றார்.
சத்ரபதி சிவாஜியின் துணிச்சலையும், மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த எதிரியைத் தோற்கடிக்கும் தந்திரத்தையும் குறிக்கும் இந்த நிகழ்வு பற்றி பலரும் இன்றளவும் தைரியக் கதைகளாக பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.