
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயிர்காப்பீடு செய்துள்ள விவசாயிகளை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஏமாற்றாமல் பணத்தை தர வேண்டும். 21 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளுக்கு பின் பா.ஜனதா கட்சி வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. கோரக்பூர் எம்.பி. யோகிஆதித்யநாத் முதல்வராக பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பெண்களின் பாதுகாப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, மின் கட்டண சலுகை, அதிகாரிகளுக்கு ஒழுக்க நெறி, அமைச்சர்களுக்கு கிடுக்கிப்பிடி விதமுறைகள் அறிவித்து மிரள வைத்து வருகிறார்.
இந்நிலையில், முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் நேற்றுமுன்தினம் 3-வது அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் பல்வேறுமுடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில் குறிப்பாக விவசாயிகள் தங்கள் பயிர்களை பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ளனர். அந்த காப்பீட்டின் கீழ் பயிர்கள் சேதமடைந்தாலோ, வறட்சியினால்,பாதிக்கப்பட்டாலோ விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால், பெரும்பாலான இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீடுகளை விவசாயிகளுக்கு வழங்குவதில்லை என அரசுக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, பிரதமர் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை 21 நாட்களுக்குள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். ஒவ்வொரு 7 நாட்களுக்கு ஒருமுறையும் அபராதமும் விதிக்கப்படும்.
ஒரு மாதத்துக்குள் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்காவிட்டால், அந்த காப்பீடு நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்.
பயிர்காப்பீட்டில் இடம் பெற்றுள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அலுவலகம் திறந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில்அளிக்க வேண்டும். கடந்த 2016-17ம் ஆண்டு மட்டும் 36 லட்சம் விவசாயிகள் பயிர்காப்பீடு பெற்றுள்ளனர். அவர்களில் உரிய நபர்களுக்கு இழப்பீடு சென்றடைய வேண்டும் என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.