சந்திரயான் 2 இறுதிக் கட்டத்தில் சிக்னல் துண்டிப்பு... நிலவில் தரையிறங்க முடியாமல் போனது விக்ரம் லேண்டர்!

By Asianet TamilFirst Published Sep 7, 2019, 6:20 AM IST
Highlights

தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். என்றாலும் சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர் சரியாக செயல்பட்டு வருகிறது என்றும் அதை வைத்து நிலவில் 95 சதவீதம் ஆய்வு செய்ய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 
 

சந்திரயான் 2  விணகலத்திலிருந்து விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்க இருந்த நிலையில், கடைசி கட்டத்தில் சிக்னல் கிடைக்காமல் போனதால் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏமாற்றத்துக்குள்ளாயினர்.
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் 2’ என்ற விண்கலத்தை கடந்த ஜூலை 22 அன்று இஸ்ரோ விண்ணில் ஏவியது. அந்த விண்கலம் புவியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக 5 முறை புவியின் வட்டப்பாதையில் உயர்த்தப்பட்டது. பிறகு ஆகஸ்டு 14 அன்று‘சந்திரயான் 2’ விண்கலம் வட்டப்பாதையிலிருந்து பிரிந்து நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.


படிப்படியாக நிலவை நோக்கி பயணத்தி சந்திரயான் 2 கடந்த 2ம் தேதி அன்று விக்ரம் லேண்டர் தனியாகப் பிரிந்து நிலவின் மேற்பரப்பை நோக்கி பயணிக்கத் தொடங்கியது. பின்னர் விக்ரம் லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டு, அதன் சுற்று வட்டப்பாதையும் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால், விக்ரம் லேண்டர் நிலவை மிகவும் நெருங்கியது. இன்று அதிகாலை 1.50 மணி அளவில் விக்ரம் லேண்டர் நிலவின் தரையில் இறங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதிகட்ட நிகழ்வு என்பதால், இஸ்ரோ விஞ்ஞானிகள்  நேற்று காலை முதலே மிகவும் பதற்றத்தோடு பணியாற்றிவந்தனர். விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கிவிட்டால், சந்திரயான் 2 திட்டம் முழு வெற்றி என்ற நிலை இருந்தது.


விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதை பெங்களூருவில்  உள்ள இஸ்ரோ செயற்கைகோள் கட்டுப்பாட்டு மையத்தில் விஞ்ஞானிகளுடன் அமர்ந்து பிரதமர் மோடி இன்று அதிகாலை பார்வையிட்டார். திக்...திக்... மன நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றிக்கொண்டிருந்தார்கள். நிலவில் விக்ரம் லேண்டர் இறங்கும் நிலையில் திடீரென அதிலிருந்து சிக்னல் எதுவும் வராமல் போனது. பதற்றம் அடைந்த விஞ்ஞானிகள், பழைய நிலைக்குக் கொண்டுவர முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இறுதிகட்டத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டதால். மேற்கொண்டு எதையும் செய்யமுடியவில்லை.
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். என்றாலும் சந்திரயான்-2 விண்கலத்தில் ஆர்பிட்டர் சரியாக செயல்பட்டு வருகிறது என்றும் அதை வைத்து நிலவில் 95 சதவீதம் ஆய்வு செய்ய முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. 

click me!