பிரபல கம்பெனிகளில் வேலையிழக்கும் ஊழியர்கள்! முடங்கிப் போன டிவிஎஸ், அசோக் லேலண்ட் நிறுவனங்கள் !!

By Selvanayagam PFirst Published Sep 6, 2019, 10:59 PM IST
Highlights

இந்தியாவின் முன்னணி மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் வேலைநாள்களை குறைத்துவரும் நிலையில் அசோக் லேலேண்ட் நிறுவனம் ஐந்து நாள்கள் வேலையில்லா நாள்களாக அறிவித்துள்ளது. இதே போல் டிவிஎஸ் நிறுவனமும் 2 நாடகள் வேலை இல்லை என அறிவித்துள்ளது. இதனால் அந்நிறுவங்களின் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அசோக் லேலண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த வாரம் செப்டம்பர் 6, 7, ஆகிய தேதிகளும், அடுத்த வாரம் செப்டம்பர் 10, 11 ஆகிய தேதிகளும் வேலையில்லா நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9ஆம் தேதி ஏற்கெனவே வேலையில்லா நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் அசோக் லேலேண்ட் நிறுவன வாகனங்களின் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது.

நிதி நிலையை கருத்தில் கொண்டு கட்டாய விடுப்பு நாட்களை மேலும் அதிகரிப்பது குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் டிவிஎஸ் மோட்டார் வாகனங்களுக்கு தேவையான எலெக்டிரிக் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் டிவிஎஸ் லூகாஸ் நிறுவனம் சமீபத்தில் இரு நாள்களை வேலையில்லா நாள்களாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து டிவிஎஸ் நிறுவனத்திற்காக டயர் உற்பத்தி செய்யும் நிறுவனம் வேலை நாள்களை குறைத்துள்ளது.

வாரத்தில் ஏழு நாள்களும் இயங்கிவந்த அந்நிறுவனம் இனி ஐந்து நாள்கள் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சூழலைப் பொறுத்து இந்த அறிவிப்பு மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பாக ஹீரோ, மாருதி சுசூகி, மகேந்திரா & மகேந்திரா, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா கிர்லோஸ்கர், போஸ்ச், ஜம்மா, வாப்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் விற்பனை வீழ்ச்சியின் காரணமாக தங்கள் வேலை நாள்களை குறைத்தன.தொடர்ந்து மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள் லே ஆஃப் அறிவித்து வருவது, தொழிலாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

click me!