சந்திரயான்-3: லேண்டரின் வருகைக்காக காத்திருக்கும் இஸ்ரோ!

By Manikanda Prabu  |  First Published Aug 23, 2023, 4:37 PM IST

சந்திரயான்-3 திட்டத்தின் தானியங்கி தரையிறங்கும் வரிசையை தொடங்க தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 40 நாள் பயணத்திற்குப் பிறகு, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க தயாராகி வருகிறது. அனைத்தும், திட்டமிட்டபடி சரியாக நடந்தால் இன்று மாலை 6.04 மணியளவில் விக்ரம் லேண்டர் மென்மையான முறையில் தரையிறக்கப்படும்.

இதனை நேரலையில் பார்க்க இஸ்ரோ ஏற்பாடு செய்துள்ளது. அதற்கான நேரலை இந்திய நேரப்படி மாலை 5.27 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த நிலையில், சந்திரயான்-3 திட்டத்தின் தானியங்கி தரையிறங்கும் வரிசையை தொடங்க தயாராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நியமிக்கப்பட்ட இடத்தில் லேண்டரின் வருகைக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ள இஸ்ரோ, இந்திய நேரப்படி மாலை 5.44 மணிக்கு லேண்டர் வருகை புரிந்ததும், தானியங்கி தரையிறங்கும் வரிசையை தொடங்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

அதன்பின்னர், விக்ரம் லேண்டர் அதனுள் இருக்கும் கணினிகளை பயன்படுத்தி நிலவில் மென்மையாக தரையிறக்க முயற்சிக்கும். தானியங்கி தரையிறங்கும் வரிசை, கட்டளைகளை பெற்றவுடன், விக்ரம் லேண்டரானது த்ரோட்டில் எஞ்சின்களை இயக்கி, தரையிறங்க முயற்சிக்கும். இஸ்ரோவில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு குழுவானது, கட்டளைகளின் வரிசையான செயல்பாட்டை உறுதிசெய்து கொண்டே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 திட்டத்தின் தொடர்ச்சியாக, சந்திரயான்-3 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தி வருகிறது. சந்திரயான்-2 பயணத்தின் போது, விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் மோதியது. இருப்பினும், சந்திரயான்2 திட்டத்தின் மூலம் செலுத்தப்பட்ட ஆர்பிட்டர் ஏற்கெனவே நிலவை சுற்றி வருகிறது. எனவே, இந்த முறை லேண்டர், ரோவர் கலன்கள் மட்டும் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.

விண்வெளியில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மறக்க முடியாத சாதனைகளும், சந்திரயான் - 3 பயணமும்!!

இந்த பணி வெற்றியடைந்தால், நிலவில் தரையிறங்கிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும். இதற்கு முன்னர், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய நாடுகள் நிலவில் தரையிறங்கியுள்ளன. மேலும், நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.

இதுவரை அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே நிலவில் மென்மையான தரையிறக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. ஆனால், அவற்றின் அனைத்து விண்கலங்களும் நிலவின் பூமத்திய ரேகைக்கு அருகில் தரையிறங்கியுள்ளன. ஆனால், உலக நாடுகளால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் நிலவின் தென் துருவத்தில் மென்மையான தரையிறக்கத்திற்கு முதல் நாடாக இந்தியா தயாராகி வருகிறது.

click me!