இஸ்ரோ ஆகஸ்ட் 14 அன்று மேற்கொள்ளும் அடுத்த நகர்வின் மூலம் சந்திரயான்-3 விண்கலத்திற்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை மேலும் குறைக்கும்.
ஞாயிற்றுக்கிழமை சந்திரயான்-3 விண்கலகத்தை நிலவை நோக்கி நகர்த்தும் இரண்டாவது செயல்முறை நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சந்திரயான்-3 சந்திரனின் மேற்பரப்புக்கு இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்கிறது.
"நிலவின் மேற்பரப்புக்கு இன்னும் நெருக்கமாக... சந்திரயான்-3 இன் சுற்றுப்பாதை இன்று (புதன்கிழமை) மேற்கொள்ளப்பட்ட நகர்வு மூலம் 174 கிமீ x 1,437 கிமீ தொலைவுக்குக் குறைக்கப்பட்டது. அடுத்த நகர்வுக்கான நடவடிக்கை ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 11.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை திட்டமிடப்பட்டுள்ளது” என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை, இஸ்ரோ சந்திரயான்-3 இன் உயரத்தை சுமார் 14,000 கிமீ குறைத்து, சந்திரனுக்கு அருகில் 4,313 கி.மீ. தூரத்திற்குக் கொண்டு சென்றது. ஆகஸ்ட் 14 அன்று மேற்கொள்ளும் அடுத்த நகர்வின் மூலம் இஸ்ரோ விண்கலத்திற்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை மேலும் குறைக்கும்.
2 ஆண்டுகளில் 1,240.6 மில்லியன் டாலர் ஆயுர்வேத பொருட்கள் ஏற்றுமதி: அமைச்சர் சர்பானந்தா சோனோவால் தகவல்
ஆகஸ்ட் 16 அன்று, சந்திரயான்-3 100 கி.மீ. வட்ட சுற்றுப்பாதையில் நுழையும். ஆகஸ்ட் 17 அன்று, விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய தரையிறங்கும் தொகுதி உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிந்து செல்லும். தரையிறங்கும் தொகுதி பிரிந்ததும், அதனை 30 கி.மீ. x 100 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுப்பாதைக்கு இஸ்ரோ நகர்த்தும். அங்கிருந்து இறுதி தரையிறக்கம் முயற்சி செய்யப்படும்.
செவ்வாயன்று பெங்களூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத், ஆகஸ்ட் 23 அன்று பாதுகாப்பாக தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக சந்திரயான் -3 செய்யப்பட்டுள்ள வடிவமைப்பு பற்றி மீண்டும் வலியுறுத்தினார்.
“30 கிமீ உயரத்திலிருந்து நிலவில் தரையிறங்கும் வரை லேண்டரின் வேகத்தை குறைப்பது தரையிறங்குவதில் மிக முக்கியமான கட்டம். 30 கிமீ தொலைவில், விண்கலம் கிடைமட்டமாக உள்ளது. விண்கலத்தை கிடைமட்ட நிலையிலிருந்து செங்குத்தாக மாற்றுவது மிகவும் சவாலானது. சந்திரயான்-2 இல் இதில் சிக்கல்கள் இருந்தன. அதனால், அதிக எரிபொருள் பயன்படுத்தப்படாமல் இருப்பதையும், தூரம் சரியாகக் கணக்கிடப்படுவதையும், அனைத்து திட்டங்களும் சரியாக செயல்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இதற்காக, வழிகாட்டுதல் வடிவமைப்பை மாற்றியுள்ளோம்" என சோமநாத் கூறியிருக்கிறார்.