
ஆந்திர மாநிலம் வளர்ச்சியிலும் ஊழலிலும் முதல் இடத்தில் இருப்பதாக, அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வாய் தவறி சொன்ன விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஆந்திர சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதில் ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 2 மணி 51 நிமிடங்கள் இடைவிடாமல் பேசினார்.
ஆந்திராவில் நடைபெற்ற 3 எம்.எல்.சி. தேர்தலில் தெலுங்கு கட்சி வெற்றி பெற்றதால் உற்சாகமாக இருந்த அவர் எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியை கடுமையான வார்த்தைகளால் பேசினார்.
ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அடாவடிதனத்தில் ஈடுபடுகிறீர்கள். உங்களை விரைவில் அடக்குவேன் என்றும் காட்டமாக பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இதுவரை செயல்படுத்தப்படாமலேயே இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடு பொய்களைக் கூறி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
உடனே கடுமையான கோபமடைந்த சந்திரபாபு நாயுடு, இந்தியாவிலேயே ஆந்திர மாநிலம் தான் ஊழல் மற்றும் வளர்ச்சியில் முதலிடம் வகிப்பதாக வாய் தவறி கூறிவிட்டார்.
அப்போது எதிர்க்கட்சிகள் கோஷமிட்டுக் கொண்டிருந்ததால் சந்திரபாபு நாயுடுவின் இந்த பேச்சினை யாரும் கவனிக்கவில்லை. அதன்பிறகு வெளியான விடியோக்களை வைத்து எதிர்க்கட்சிகளின் சர்ச்சையை எழுப்பினர்.
எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் பலரும் இந்த வீடியோ பதிவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.