
ஆந்திர மாநிலத்தில் கடும் பணத்தட்டுப்பாடு நிலவுவதால், அதைத்தீர்க்க ரிசர்வ் வங்கி கவர்னரிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தொலைபேசியில் முறையிட்டார். அவர் கோரிக்கை விடுத்த 2 மணி நேரத்தில், 2 விமானத்தில் ரூ.2, 400 கோடி பறந்துவந்தது.
ஆந்திர மாநிலத்தில் கடும் பணப்பற்றாக்குறை இருப்பதால், மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தரமுடியாமல் திணறுவதாகரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு முறையிட்டார். இவர் முறையிட்ட அடுத்த 2 மணிநேரத்தில் இரு விமானங்களில் ரூ.2 ஆயிரத்து 420 கோடி பணத்தை கவர்னர் உர்ஜித் படேல் அனுப்பி வைத்தார்.
இந்த இரு விமானங்களில் ஒன்று திருப்பதியிலும், மற்றொன்று விசாகப்பட்டிணத்திலும் வெள்ளிக்கிழமை தரை இறங்கியது. இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கும் பணத்தை அனுப்ப ஏற்பாடு நடந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் பணம் எளிதாக கிடைக்க நடவடிக்ைக எடுங்கள் என வங்கி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். பணப்பற்றாக்குறை அதிகம் நிலவும் மாநிலங்களுக்கு ரூ.240 கோடியும் மற்ற மாநிலங்களுக்கு ரூ.160 கோடியும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது'' என்றார்.
முதல் கூட்டம்
நாட்டில் ‘டிஜிட்டல் பேமெண்ட்’ முறையை ஊக்கப்படுத்தி, நிதிப் பரிமாற்றத்தில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதற்கான செயல்திட்டத்தை உருவாக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைக்கப்பட்ட 6 மாநில முதல்வர்கள் வரும் 7,8 ந்தேதிபுதுடெல்லியில் கூடி ஆலோசனை நடத்துகிறது.
பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் டிஜிட்டல்பரிமாற்றத்துக்கு மாற அரசு வலியுறுத்தி, அதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
6 மாநில முதல்வர்கள்
மக்கள் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகள், உலகளவில் பின்பற்றப்படும் முறைகள் குறித்து ஆய்வு செய்ய ஆந்திரமுதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 6 மாநில முதல்வர்கள் உள்ளிட்ட 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவில் ஓடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான், சிக்கிம் முதல்வர் பவான் குமார் சாம்லிங், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் உள்பட 6 மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் நிதிஅயோக் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா, நிதிஅயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் உள்ளிட்ட 13 பேர் இடம் பெற்றுள்ளனர்.
ஆலோசனைக்கூட்டம்
இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் வரும் 7 மற்றும் 8ந்தேதிகளில் நடைபெற இருக்கிறது. இது குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், “ வரும் 7, 8-ந்தேதிகளில் நடக்கும் கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டு இருக்கிறது.அப்போது வங்கி அதிகாரிகள், மாநில அதிகாரிகள், முதல்வர்களிடம் டிஜிட்டல் பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதில் இருக்கும் சவால்கள், தடைகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும். அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள் குறித்து பேசப்படும்'' என்றார்.
இதற்கிடையே நேற்று முன்தினம், பணமில்லா பொருளாதாரத்தை கொண்டு வருவது குறித்து காணொலிக் காட்சி மூலம் இந்த குழுவின் உறுப்பினர்களும் முதல்வர்சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.