டீப் ஃபேக்: சமூக ஊடகங்களுக்கு 7 நாள் கெடு; நடவடிக்கை எடுக்க அதிகாரி - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

By Manikanda Prabu  |  First Published Nov 24, 2023, 2:45 PM IST

சமூக ஊடகங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், டீப் ஃபேக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாகவும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்


டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள், தகவல்கள் உருவாக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் அண்மையில் கவலை தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக, டீப் பேக்குகளுக்கு எதிராக விரைவில் சட்டம் இயற்றப்படும் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களுக்கு 7 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும், டீப் ஃபேக்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரி நியமிக்கப்படவுள்ளதாகவும் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Latest Videos

undefined

சமூக ஊடக தளங்களால் தகவல் தொழில்நுட்ப விதிகள் மீறப்படுவது குறித்து பயனர்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (Meity) இணையதளம் ஒன்றை உருவாக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறினார். “ஐடி விதிகளை மீறுவது குறித்து பயனர்களுக்கு தெரிவிக்கவும், எஃப்ஐஆர் பதிவு செய்வதில் அவர்களுக்கு தேவையான உதவிகளை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செய்யும்.” என அமைச்சர் கூறினார்.

போலி இடுகைகளை பதிவிடும் நடுவில் இருப்பவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும். அத்தகைய உள்ளடக்கம் எங்கிருந்து வந்தது என்ற விவரங்களை அவர்கள் வெளிப்படுத்தினால், உள்ளடக்கத்தை இடுகையிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

ஆளுநர் குறித்து விரிவாக பேசப் போகும் முதல்வர் ஸ்டாலின்!

தகவல் தொழில்நுட்ப விதிகளை மீறுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்ற அவர், தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி சமூக ஊடக தளங்களுக்கு அவற்றின் பயன்பாட்டு விதிமுறைகளை சீரமைக்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றார். “செயற்கை நுண்ணறிவு காலத்தில், தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்துவது முக்கியம்.” என்றும் அமைச்சர் கூறினார்.

டீப் ஃபேக்குகளை உருவாக்கி புழக்கத்தில் விட்டால், ரூ.1 லட்சம் அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், போலி வீடியோக்களுக்கு எதிரான சட்டங்கள், விதிகள், அபராதங்கள், நடைமுறைகள் குறித்து சமூக ஊடக தளங்களுக்கு சில அறிவுறுத்தல்களையும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வழங்கியுள்ளது. போலி வீடியோக்கள் தொடர்பாக புகாரளிக்கப்பட்டால், 36 மணி நேரத்திற்குள் அத்தகைய உள்ளடக்கத்தை அகற்றி அதனை முடக்க வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, போலியான தகவல்கள் பரவுவதைத் தடுப்பது ஆன்லைன் தளங்களுக்கான சட்டப்பூர்வமான கடமை என்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!