
பாதயாத்திரை என்பது மக்களை சென்றடைவதற்கான ஒரு பாரம்பரிய வழி. ஆனால் ராகுல் காங்கிரஸில், தலைவர்கள் போதையில் தள்ளாடியபடி உற்சாகமாக சுற்றி வருகின்றனர் என திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக மேகதாது பகுதியில் அணை கட்டும் முயற்சிகளில் கர்நாடக அரசு ஈடுபட்ட நிலையில் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேகதாது அணை தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சி, பாஜக தலைமையிலான கர்நாடக அரசு விரைவில் மேகதாது அணை கட்ட வேண்டுமென வலியுறுத்தி மேகதாதுவில் இருந்து பெங்களூருவுக்கு 11 நாட்கள் பாதயாத்திரை தொடங்கியுள்ளது.
இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டு நடைபயணம் தொடங்கி வைத்தனர். இந்த யாத்திரை, காவிரி மற்றும் அர்காவதி ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் போய் முடியுமாம். 15 சட்டசபைத் தொகுதிகள் வழியாக 179 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த யாத்திரை நடைபெறவுள்ளது. ஜனவரி 19ம் தேதி பெங்களூர் பசவனகுடி மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் யாத்திரையை முடிக்கவுள்ளனர்.
இதனிடையே கர்நாடகாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் நிகழ்ச்சிகளும் தடை செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டுள்ள பாதயாத்திரை நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி விதிகளை மீறி மேற்கொண்டதாக பாஜக குற்றம்சாட்டியது. இந்நிலையில், சட்டவிரோதமாக பாதயாத்திரை நடத்தி வரும் டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், உற்சாகம் மற்றும் உற்சாகமாக இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம்தான் பாதயாத்திரைகள் என ராஜீவ் சந்திரசேகர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இந்த பாதயாத்திரை என்பது ஒரு பாரம்பரிய வழி (மகாத்மா காந்தி கூட பாதயாத்திரை சென்றது) மக்களை சென்றடைய வேண்டும். ஆனால் ராகுல் காங்கிரஸில், "தலைவர்கள்" "உற்சாகம்" மற்றும் "உற்சாகமான" போதையில் இருப்பதற்கான ஒரு சந்தர்ப்பம்தான் பாதயாத்திரைகள் என விமர்சனம் செய்துள்ளார்.