ஒரு கோடிக்கும் மேலான மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி இன்ப அதிர்ச்சி - அகவிலைப்படி 2 சதவீதம் உயர்கிறது

First Published Oct 28, 2016, 4:47 AM IST
Highlights


மத்திய அரசின் 50 லட்சம் ஊழியர்கள், 58 லட்சம் ஓய்வு ஊதியம் பெறுவோர்கள் என மொத்தம் ஒருகோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தீபாவளி இனிப்புச் செய்தியாக அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு இன்று அறிவிப்பு வெளியிடலாம் எனத் தெரிகிறது.

இந்த அறிவிப்பு ஜூலை முதல்தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய அரசின் கீழ் பணிபுரியும் 50 லட்சம் ஊழியர்கள், 58 லட்சம் ஓய்வு ஊதியம் பெறுவோர்களின் அடிப்படை ஊதியத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தொகையை  உயர்த்துவது குறித்து இன்றைய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதலால், அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகலாம்  எனத் செய்திகள் தெரிவிக்கின்றன.

நாட்டில் நிலவும் சில்லரை பணவீக்கத்தின் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட உள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்பட்டு 125 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில், 7-வது ஊதியக்குழுவோடு அகவிலைப்படி இணைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு போதாது, 3 சதவீதம் வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பு தலைவர் கே.கே.என். குட்டி கூறுகையில், “  2015 ஜூலை முதல் 2016 ஜூன்வரை 12 மாத சராசரி சில்லரைபணவீக்கத்தை கணக்கிட்டால் 2.92 சதவீதம் பணவீக்கம் சதவீதம் உள்ளது. இதையடுத்து, 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட வேண்டும்.  2 சதவீதம் அறிவித்தால் அதுபோதுமானதாக இருக்காத'' எனத் தெரிவித்தார்.

 

click me!