
விவசாயிகளை ‘கைவிட்டது மத்திய அரசு’…..‘பயிர் கடன் தள்ளுபடிதிட்டம் இல்லையாம்…’
விவசாயிகளுக்கு பயிர் கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் மத்திய அரசுக்கு இல்லை. சரியான தவனையை செலுத்தும் விவசாயிகளுக்கு கடன் சுமையை குறைப்பதற்கான திட்டங்கள் மட்டுமே இருக்கிறது என்று மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள்
தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
புதிய வகை போராட்டம்
மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தூக்கு போட்டுக் கொள்ளுதல், மொட்டை அடித்துக் கொள்வது என ஒவ்வொரு நாளும் வித்தியாசமாக போராட்டம் நடத்தினர்.
இன்று 30-வது நாள்
போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை அரசியல் தலைவர்கள், வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாய சங்க தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 29-–வது நாளாக நேற்று மண் சோறு சாப்பிடும் போராட்டத்தையும் விவசாயிகள் நடத்தினர்.
உ.பி.யில் தள்ளுபடி
உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் ரூ.36 ஆயிரத்து 359 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
எதிர்பார்ப்பு
இதற்கிடையே தமிழகத்திலும் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவுமில்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
தள்ளுபடி இல்லை.. சுமை குறைக்கப்படும்
விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படுமா என்று மாநிலங்கள் அவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கெங்வார் பதில் அளிக்கையில், “ விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்யும் திட்டம் ஏதும் அரசுக்கு இல்லை. விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் திட்டம் மட்டுமே இருக்கிறது. அதற்கு பெரிய அளவிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வேளாண்துறை மூலம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலச்சங்கம் மூலம் விவசாயிகள் ரூ.3 லட்சம் வரை கடன் பெற்றால், அதற்கான வட்டி 7 சதவீதமாக அரசு குறைத்துள்ளது. கடன் பெற்ற தொகையை முறைப்படி செலுத்தி வந்தால், வட்டியையும் 3 சதவீதம் தள்ளுபடி செய்யப்பட்டு, ஆண்டுவட்டி 4 சதவீதமாக கணக்கிடப்படும்.
மேலும், இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் செலுத்தும் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது, புதிய கடனும் வழங்கப்படுகிறது’’ எனத் தெரிவித்தார்.