
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதிரடியான திட்டங்களையும், விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி அறிவிப்பையும் அடுத்து, ஹரியானா, மஹாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகளும் கடன் தள்ளுபடி கேட்டு அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இதனால், 3 மாநில முதல்வர்களும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடிசெய்யப்படும் எனத் தெரிவித்து இருந்து.
அதற்கேற்றார் போல் 15 ஆண்டுகளுக்குப்பின் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா கட்சியில் இருந்து கோரக்பூர் எம்.பி.யும் மடாதிபதியுமான யோகி ஆதித்யநாத் முதல்வரானார்.
இவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல அதிரடியான திட்டங்கள், அரசு அலுவர்களுக்கு ஒழுக்க நெறிகள், பெண்கள் பாதுகாப்பு என பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், தனது முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் விவசாயிகளின் பயிர்கடன் ரூ.36 ஆயிரத்து 500 கோடியை தள்ளுபடி செய்து அறிவித்தார்.
இந்த அறிவிப்பையடுத்து, மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சியும், விவசாயிகளுக்கு பயிர்கடன் தள்ளுபடியை அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது தொடர்பாக தொடர்ந்து அறிக்கைகளையும் விடுத்து, விமர்சனம் செய்து வருகிறது.
பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சி்ங்கும் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடிக்கு மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், மத்திய அரசின் உதவி காங்கிரஸ் ஆளும் பஞ்சாப் மாநிலத்து கிடைப்பது என்பது கனவிலும் நடக்காது. ஆதலால், மத்திய அரசு உதவாவிட்டாலும் கூட, மாநில அரசே கடன் சுமையை தாங்கிக் கொண்டு விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிக்க முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக விவசாயிகளின் கடன் தள்ளுபடி இருக்கிறது. ஏற்கனவே பஞ்சாப் மாநிலம், ரூ.1.25 லட்சம் கோடி கடனில் சிக்கித் தவிக்கிறது.
இந்நிலையில், விவசாயிகளின் ரூ.69 ஆயிரம் முதல் ரூ.80ஆயிரம் வரையிலான பயிர்கடனை தள்ளுபடிசெய்து அந்த சுமையையும் தாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அங்குள்ள விவசாயிகள், எதிர்க்கட்சிகள் உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத்தை காரணம் காட்டி பயிர்கடனை தள்ளுபடிசெய்ய வலியுறுத்தி வருகின்றனர்.
இதேபோல ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கும் எதிர்க்கட்சிகளும் விவசாயிகளும் பயிர்கடனை தள்ளுபடிசெய்ய கோரிக்கை விடுத்து, போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால்,அவரும் விவசாயிகள் பயிர்கடன் தள்ளுபடி குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதில் மஹாராஷ்டிரா அரசு குறித்து அந்த மாநிலத்தின் நிதித்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ மஹாராஷ்டிராமாநிலம் ஏற்கனவே ரூ.3.50லட்சம் கோடி கடனில் சிக்கிஇருக்கிறது.
இதில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கோடி சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆதலால், முதல்வர் பட்நாவிஸ் கடன் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு முடிவும் எடுக்க இயலாது. ஒருவேளை கடன் தள்ளுபடி அறிவித்தால், மாநிலத்தின் கடன்சுமை ரூ.4.15லட்சம் கோடியாக அதிகரிக்கும்” என்றார்.