
தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில், திறந்தவௌியை கழிப்பிடமாக பயன்படுத்தி, கழிவறை கட்டாத வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு ரத்து செய்து உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கம்மம் மாவட்டம், நிலகொண்டபள்ளி மண்டலம், ராஜேஸ்புரம் கிராமத்தில் உள்ள 32 வீடுகளைச் சேர்ந்தவர்கள் வீட்டில் கழிவறை கட்டாமல் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தி வந்துள்ளனர். உள்ளாட்சி நிர்வாகம் பல முறை எச்சரிக்கை செய்தும், வீட்டில் கழிவறை கட்டாததையடுத்து, அந்த வீட்டு உரிமையாளர்களின் மின் இணைப்பு, குடிநீர் இணைப்பை துண்டித்து கிராம நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
மேலும், கொமட்லகுடம், போபாரம், திம்மிநேனிபாலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கும் அந்த உள்ளாட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி, ஏன் வீடுகளில் கழிவறை கட்டவில்லை என்று விளக்கம் கேட்டுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது-
‘சுவாச் கிராமேனா’ திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மண்டலத்திலும் 2,500 கழிவறைகள் கட்ட அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டம் நவம்பர் 14-ந்தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இலக்குக்கான தேதி நெருங்கும் வேளையில் மாவட்ட அதிகாரிகள், மண்டல அதிகாரிகள் மீது கடும் அழுத்ததை திணிக்கிறார்கள்.
இதனால், வேறு வழியின்றி மக்களை கழிவறை கட்ட சொல்லியும், கட்டாதவர்களின் வீடுகளில் மின் இணைப்பையும், குடிநீர் இணைப்பும் அதிகாரிகள் துண்டித்து வருகின்றனர்.அதுமட்டுமல்லாமல், முதியோர்களின் உதவித்தொகை உள்ளிட்ட மற்ற நல உதவிகளையும் நிறுத்தி விடுவதாக மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
மேலும், கழிவறை கட்ட ஒவ்வொரு வீட்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதி உதவியை அரசு அளிக்கிறது. கழிவறை கட்டும் விஷயத்தில் 3 வாய்ப்புகளை மக்களுக்கு அரசு வழங்குகிறது. முதலாவதாக, வீட்டின் உரிமையாளர்கள் தங்களது சொந்த செலவில் கழிவறை கட்டினால், அவருக்கு அதற்குரிய தொகையை அரசு அளிக்கும். 2வதாக, கழிவறைக்கான பூர்வாங்கப் பணிகளை உரிமையாளர்கள் செய்ய வேண்டும், கழிவறையை அரசு கட்டித்தரும். 3-வதாக பயணாளிகள் பூர்வாங்க பணிகளை செய்தபின், அரசு கழிவறைக்கான கல், மண், சிமெண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களை அளிக்கும். இதில் எதை வேண்டுமானாலும் பயணாளிகள் தேர்வு செய்யலாம்.
நாங்கள் மக்களுக்கு கழிவறை குறித்து விழிப்புணர்வு செய்தும் அவர்கள் கட்ட மறுக்கிறார்கள். இதனால் ேவறு வழியின்றி ரேஷன், உதவித்தொகையை நிறுத்திவிடுவோம் என மிரட்டல் விடுக்கிறோம் இவ்வாறு அவர்கள் தெரிவிக்கின்றனர்.