பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தலா 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய அரசின் வருவாய்த்துறை அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி தலா 2 ரூபாய் உயர்த்தப்படுவதாக மத்திய அரசின் வருவாய்த்துறை அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச அளவில் வீழ்ச்சியை கண்டுள்ளதால், எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கலால் வரி உயர்வு உயர்த்தப்பட்டிருக்கிறது.
நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.13 ஆகவும், டீசலின் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
சில்லறை விலையில் இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த உத்தரவு கூறவில்லை என்றாலும், சில்லறை விலைகள் மாற்றப்பட வாய்ப்பில்லை என்று தொழில்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில்லறை விற்பனை விலை இந்த கலால் வரி உயர்வால் பாதிக்கப்படாது என்று பெட்ரோலிய அமைச்சகமும் தெரிவித்துள்ளது "இன்று கலால் வரி விகிதங்கள் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசலின் சில்லறை விலையில் எந்த அதிகரிப்பும் இருக்காது என பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன," என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தில் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
உயர்த்தப்பட்ட கலால் வரி ஏப்ரல் 8 முதல் அமலுக்கு வரும் என்றும் மத்திய அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.