
மின்துறை சீர்திருத்த பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.7,054 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.20,860.40 கோடி நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் இழப்பீட்டுக்கு நிலுவை தொகை வகையில் தமிழ்நாட்டிற்கு ரூ.13,504.74 கோடி தர வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக ரூ.7,899.69 கோடி வழங்க 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தது.
நிதிக்குழு பரிந்துரைத்ததில் 2 ஆயிரத்து 900 கிராம ஊராட்சிகளுக்கான ரூ.548.76 கோடி மானியம் வழங்கப்படவில்லை. 2 ஆயிரத்து 700 ஊராட்சிகளிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதால் மானிய தொகையை உடனே விடுவிக்க வேண்டும். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.20,860.40 கோடியை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த நிலையில், தமிழகத்திற்கு மின்துறை சீரமைப்பு பணிகளுக்காக ரூ.7,054 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் மின்சாரத்துறையின் சீரமைப்புக்காக தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம், அசாம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை ஒட்டுமொத்தமாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், அசாம், ஒடிசா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், ஹிமாச்சல் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 10 மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக தமிழகத்திற்கு மட்டும் ரூ.7,054 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களான உத்தர பிரதேசத்துக்கு ரூ.6,823 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.5,186 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு ரூ.3,716 கோடி, ஒடிசாவுக்கு ரூ.2,725 கோடி, அசாமுக்கு ரூ.1,886 கோடி, ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.251 கோடி, மேகாலயாவுக்கு ரூ.192 கோடி, சிக்கிமுக்கு ரூ.191 கோடி, மணிப்பூருக்கு ரூ.180 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.