
என்எஸ்இ ரகசிய தகவல்களை முன்கூட்டிய பங்குதரகு நிறுவனங்கள் சர்வரிலிருந்கு எடுக்க உதவியதாகக் கூறப்படும் கோ-லோகேஷன் ஊழல் வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் என்எஸ்இ முன்னாள் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி அதிகாரிகளின் பங்கு குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த இருக்கிறது.
தேசிய பங்கு சந்தையின் தலைமை செயல் அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, தலைமை செயல் அதிகாரியின் ஆலோசகர் என்ற மிக முக்கிய பதவிக்கு ஆனந்த் சுப்ரமணியன் என்பவர் நியமிக்கப்பட்டார். இவரின் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன என்றும் ஆண்டுக்கு 3 முறை ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, ரூ.2.31 கோடியாக அதிகரிக்கப்பட்டது என்றும் புகார்கள் வந்தன.
இது குறித்து பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்புான செபி விசாரணை நடத்தியதில் ராமகிருஷ்ணா, கடந்த 20 ஆண்டுகளாக இமயமலையில் உள்ள ஒரு சாமியாரின் ஆலோசனையின்படிதான் நடந்துள்ளார். அவரின் அறிவுரைகள், கட்டளைப்படிதான் தேசியப் பங்குச்சந்தையையும் நடத்தி, என்எஸ்இ தொடர்பான பல்வேறு ரகசிய தகவல்களையும் பகிர்ந்துள்ளது செபி விசாரணையில் தெரிய வந்தது.
தேசியப் பங்குச்சந்தைக்கு ரூ.5 கோடிவரை இழப்பு ஏற்படுத்தியது, விதிமுறைகளைப் பின்பற்றாதது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களை சித்ரா ராமகிருஷ்ணா செய்ததை செபி கண்டுபிடித்தது. இதையடுத்து, முன்னாள் தலைமை செயல் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், முன்னாள் செயல் அதிகாரி ரவி நரேன், ஆலோசகர் ஆனந்த் சுப்ரமணியன், ஆகியோருக்கு தலா ரூ.2 கோடியும் அபராதமாக செபி விதி்த்தது
இதற்கிடையே என்எஸ்இ தொடர்பான ரகசிய ஆவணங்களை பங்குச்சந்தையில்பட்டியலிடுவதற்கு முன்பே சில நிறுவனங்களுக்கு தகவல்களை அளித்தது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு வழக்குகப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே சித்ரா ராமகிருஷ்ணா, ஆனந்த் சுப்பிரமணியன் ஆகியோர் வீடுகளில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர், கடந்த 2018ம் ஆண்டு என்எஸ்இ தகவல்களை சர்வரிலிருந்து சில நிறுவனங்கள் முறைகேடாக தகவல்களைப்பெற உதவிய கோ-லொகேஷன் வழக்கில் சிபிஐ அதிகாரிகள் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் என்எஸ்இயில் நடந்த ஊழல், ரகசிய தகவல்களை சாமியாருடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்தது குறித்து செபி காட்டமான விமர்சனங்களையும் கருத்துக்களையும் தெரிவித்தநிலையில் ஏன் தீவிரமான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை, மோசடி குற்றச்சாட்டு ஏன் சுமத்தவில்லை, கிரிமினல் குற்றச்சதி குற்றச்சாட்டு சுமத்தவில்லை என்ற கேள்வி சிபிஐக்கு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக செபி அமைப்பின் சில அதிகாரிகளிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரண நடத்த உள்ளனர். இது தொடர்பாக
என்எஸ்இ ரகசிய தகவல்களை சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை சாமியாருடன் பகிர்ந்துகொண்டது தொடர்பான வழக்கில் அடையாளம் தெரியாத செபி அதிகாரிகள் மீது சிபிஐ அமைப்பினர் முதல்தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர்.
ஆனால், சித்ரா ராமகிருஷ்ணா மீது பல்வேறுபுகார்கள் இருந்தும், அவர்மீது எந்தவிதமான தீவிரக் குற்றச்சாட்டும் வைக்காமல் செபி அதிகாரிகள் அவரை விடுவித்ததும், சாமியாருக்கும், சித்ராவுக்கும் இடையே ஏராளமான மின்அஞ்சல்களைக் கைப்பற்றியபோதிலும் தீவிரமான குற்றச்சாட்டு ஏதும் வைக்காமல் இருப்பது சிபிஐக்கு மேலும் சந்தேகத்தை வலுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2018ம் ஆண்டிலிருந்து கோ-லொகேஷன் ஊழல் வழக்கை சிபிஐதான் விசாரித்து வருகிறது. ஆனால், வழக்கில் முன்னேற்றம் தரக்கூடிய அளவுக்கு டிஜிட்டல் டேட்டா ஏதும் இல்லாததால் வழக்கு தேங்கியுள்ளது. ஆனால், டிஜிட்டல் டேட்டா விவரங்களை என்எஸ்இ அழித்திருக்கலாம் என செபி குற்றம்சாட்டுகிறது. சித்ரா, சுப்பிரமணியன்இருவரின் மடிகணினிகளையும் இ-வேஸ்ட் என்ற போர்வையில் என்எஸ்இ அழித்திருக்கலாம் என செபி உணர்கிறது.
ஆதாரங்களை அழிப்பது என்பது ஐபிசி201ன் கீழ் குற்றமாகும். ஆனால், ஆதாரங்களை அழித்துவிட்டதாக குற்றம் சாட்டும் செபி அதிகாரிகள், செபி தரப்பில் காவல்துறையிடம் எந்தவிதமான புகாரும் வழங்கப்படவில்லை என்பதும் சந்தேகத்தை எழுப்புகிறது. ஆதலால் வரும் நாட்களில் செபி அதிகாரிகள் சிலரிடம் சிபிஐ அமைப்பினர் விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது