
காசியாபாத்தில் இருக்கும் வங்கி லாக்கரில் இன்று சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று இதுகுறித்து பேட்டி அளித்து இருந்த மணீஷ் சிசோடியா, ''நாளை சிபிஐ எனது லாக்கரில் சோதனை மேற்கொள்ள உள்ளது. என்னுடைய லாக்கரில் எதுவும் கிடைக்கப் போவதில்லை. ஆகஸ்ட் 19ஆம் தேதி எனது வீட்டில் நடந்த 14 மணி நேர சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை. இதேபோல் வங்கி லாக்கரில் இருந்து எதுவும் கிடைக்கப் போவதில்லை. நானும், எனது குடும்பத்தினரும் இந்த சோதனைக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். சிபிஐ-யை வரவேற்கிறேன்'' என்று தெரிவித்து இருந்தார்.
டெல்லி துணை முதல்வராக இருக்கும் மணீஷ் சிசோடியா, வரி வருவாய்த்துறை அமைச்சராகவும் இருந்து வருகிறார். மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருந்தது. டெல்லி லெப்டினட் கவர்னர் அனில் பைஜாலின் அனுமதியின்றி மதுபானக் கொள்கைகளை டெல்லி அரசாங்கம் அறிமுகம் செய்ததாக மணீஷ் சிசோடியா மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
2047க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்... உறுதி அளித்தார் பிரதமர் மோடி!!
மதுபான கடைகளுக்கான உரிமம் வழங்கியதில், தகுதியானவர்களுக்கு வழங்காமல் லஞ்சம் பெற்றுக் கொண்டு வழங்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதம் அமலுக்கு வந்த மதுபானக் கொள்கைகளை தற்போது டெல்லி அரசாங்கம் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் வாபஸ் பெற்றுள்ளது.
சிபிஐ-யின் குற்றச்சாட்டுக்களை முழுவதும் மணீஷ் சிசோடியா மற்றும் ஆம் ஆத்மி கட்சி மறுத்து வருகிறது. ''ஆம் ஆத்மி கட்சியில் இருந்து ஆதாயம் தேடுவதற்காக பாஜக இந்த விஷயத்தை கிளப்பி இருக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் தான் மதுபானக் கடைகள் உரிமம் வழங்கப்பட்டது'' என்று ஆம் ஆத்மி தெரிவித்து இருந்தது. ''இவர்கள் அனைவரும் பயப்படுவது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பார்த்துதான். மக்கள் பெரிய அளவில் அவரை விரும்புவதாலும், எங்கே தேசிய அளவில் போட்டியாக உருவெடுத்து விடுவாரோ என்ற அச்சத்தில் பாஜகவினர் உள்ளனர்'' என்று மணீஷ் சிசோடியா தெரிவித்து இருந்தார்.
சீன போன்களின் விற்பனையை தடை செய்யும் திட்டம் இல்லை… மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் விளக்கம்!!
ஒரு பக்கம் சோதனை என்ற பெயரில் மறுபக்கம் ஆத் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு வலை விரித்து, ஆட்சியை கலைக்க பாஜக திட்டமிட்டு இருந்ததாகவும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டி இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்து இருந்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ''தனக்கு சட்டசபையில் மெஜாரிட்டி இருக்கிறது என்பதை நிரூபித்து, பாஜகவுக்கு பாடம் புகட்ட இருக்கிறேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் கொடுத்து வருகின்றனர்'' என்று தெரிவித்து இருந்தார்.
முன்பு, மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து இருந்த நிலையில், அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்ட விரோத பண பரிமாற்றத்தின் கீழ் இந்த வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து இருக்கிறது. எந்த நேரத்திலும் மணீஷ் சிசோடியாவிடம் விசாரணை மேற்கொள்ளலாம் என்று தெரிய வந்துள்ளது.
இன்று வங்கி லாக்கர் சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.