காவிரி அணைகள் ஆய்வு - மத்திய, மாநில நிபுணர் குழு பெங்களூருவில் இன்று ஆலோசனை

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 11:18 PM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
காவிரி அணைகள் ஆய்வு - மத்திய, மாநில நிபுணர் குழு பெங்களூருவில் இன்று ஆலோசனை

சுருக்கம்

காவிரி அணைகளை ஆய்வு செய்யும் 9 நிபுணர்கள் குழுவின் கூட்டம் இன்று பெங்களூருவில் நடக்கிறது. ஆலோசனை முடிந்த பின் இந்த குழுவினர் கர்நாடகா அணைகளையும், மேட்டூர் அணையையும் பார்வையிடுகின்றனர். பின்னர் காவிரி டெல்டா மாவட்டங்களையும் ஆய்வு செய்கிறார்கள்.

கடந்த 30ம் தேதி, காவிரி நீர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களில் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை முதலில் ஏற்றுக் கொண்ட மத்திய அரசு திடீரென ‘‘உச்ச நீதிமன்ற 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்சில் மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், 2 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட முடியாது. எனவே, 30ம் தேதி உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

கர்நாடக அரசு தரப்பிலும், ‘‘இந்த ஆண்டில் இனிமேல் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது’’ என வாதிட்டது. தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சேகர் நாப்டே, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என்று மத்திய அரசு கூறுவதில் உள்நோக்கம் உள்ளதாக வாதிட்டார்.

இதையடுத்து, மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட செப்டம்பர் 30ம் தேதி உத்தரவை நிறுத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், கர்நாடக அரசு வரும் 7 முதல் 18ம் தேதி வரை தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.

இந்த விஷயத்தில் மத்திய அரசு நீர்வள நிபுணர்குழு அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அணைகளையும், டெல்டா பாசனப் பகுதிகளையும் ஆய்வு செய்து வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், உயர் மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழுவை மத்திய நீர்வள ஆதாரங்கள் மற்றும் ஆறுகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் அமைத்துள்ளது. குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத் தலைவர் ஜி.எஸ்.ஷா நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் உறுப்பினர்களாக மத்திய நீர்வள ஆணையக் குழுவின் உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா கோதாவரி பாசன அமைப்பு தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழகம் மற்றும் கர்நாடக மாநில செயலாளர்கள், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைப் பொறியாளர்கள் என 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு தரப்பில் பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாளை இந்த குழுவின் முதல் கூட்டம் பெங்களூருவில் நடக்கிறது. இதில் காவிரி தொடர்பாக இரு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்னைகள் குறித்து மாநில தலைமை செயலாளர்கள், பொறியாளர்களிடம் கருத்து கேட்கிறார்கள். பின்னர் அவர்கள் கர்நாடக மாநில அணைகளை பார்வையிட்டு விட்டு மேட்டூர் வருகிறார்கள்.

மேட்டூர் அணையை ஆய்வு செய்த பின்னர் காவிரி டெல்டா மாவட்டங்களில், குறிப்பாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறும் சாகுபடி பணிகளையும் குழுவினர் ஆய்வு செய்கின்றனர். அடுத்தவாரம் இந்த குழுவினர் டெல்டா மாவட்டங்களுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்களை எந்தெந்த இடங்களுக்கு அழைத்து செல்வது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகிறது. ஆய்வின்போது இரு மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, அந்த மாநிலங்களின் பாசன பரப்பு ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இந்த ஆய்வின் அறிக்கையை அவர்கள் வரும் 17ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விர்ர்ர்ரென உயரும் தங்கத்தின் விலை..! உலகளவில் தாறுமாறாக உயர இதுதான் காரணம்..! எப்போது குறையும் தெரியுமா..?
காவி உடையில் சிங்கம்..! மோடி- யோகியை ஆதரிப்பதால் என் சமூகம் ஒதுக்குகிறது..! தௌகீர் அகமது வேதனை..!