
500ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நேற்றிரவு முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய மக்கள் தாங்கள் வைத்துள்ள பணத்தை மாற்ற முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், 500, 1000 நோட்டுகளை தடை செய்ததை எதிர்த்து சங்கம் லால் பாண்டே என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், மத்திய அரசு திடீரென அறிவித்த இந்த திட்டத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாக தெரிவித்துள்ளார்.
எனவே, 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் திட்டத்தை செயல்படுத்த கால அவகாசம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.