
ஐதராபாத்தை சேர்ந்த உபர் நிறுவன கார் டிரைவர் ஒருவரின் வங்கிக்கணக்கில் ரூ. 7 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட்செய்யப்பட்டு அவருக்கே தெரியாமல் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டுபிடித்த வருமான வரித் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
ரூபாய் நோட்டு அறிவிப்பு
நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ந்தேதி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத் தொடர்ந்து டிசம்பர் 30-ந்தேதி வரை செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என அறிவித்தது.
கண்காணிப்பு
அதே சமயம், இந்த அறிவிப்பை பயன்படுத்தி, கருப்பு பணம் பதுக்கியவர்கள் பலர், வங்கிகளில் செயல்படாத கணக்குகளில் கோடிக்கணக்கில் செல்லாத ரூபாய்களை டெபாசிட் செய்து, அதை தங்கள் கணக்கில் மாற்றி வெள்ளையாக்கும் சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து, வருமான வரித்துறை இதை தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கினர்.
செயல்படாத கணக்கு
அதில் ஐதராபாத்தைச் சேர்ந்த உபர் நிறுவன கால் டாக்சி டிரைவர் ஒருவர், ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் வங்கியில் கணக்கு வைத்து இருந்தார். பல ஆண்டுகளாக இந்த வங்கிக்கணக்கில் பணம் டெபாசிட் செய்யாததால், செயல்படாமல் இருந்தது.
இந்நிலையில், அவரின் வங்கிக்கணக்கில் நவம்பர் 2-வது வாரத்துக்கு பின், ரூ. 7 கோடி பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்தனர்.
விசாரணை
இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “ நவம்பர் 2-வது வாரத்துக்கு பின், அடுத்த சில வாரங்களில் உபர்நிறுவன கால் டாக்சி டிரைவர் கணக்கில் ரூ. 7 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சிறிது, சிறிதாக அந்த பணம், ஆர்.டி.ஜி.எஸ். முறையில், நகைக் கடை அதிபர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்தியபோது, தனக்கு ஏதும் தெரியாது, அந்த வங்கிக் கணக்கில் நீண்ட காலமாக டெபாசிட் ஏதும் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
கண்காணிப்புகேமரா
இதையடுத்து, ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத் வங்கிக்கு, அந்த டிரைவரை அழைத்துச் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தோம். அதில் அந்த டிரைவருடன் இருவர் வந்து சென்றதை கண்டுபிடித்தோம்.
வாக்குமூலம்
அந்த டிரைவருடன் வந்து சென்ற இருவர் குறித்து தீவிரமாக விசாரணை செய்து, அவர்களையும் கண்டுபிடித்தோம். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பரிமாற்றம் செய்யப்பட்ட ரூ. 7 கோடிக்கும் தங்கக்கட்டிகள், தங்கநகைகள் வாங்கியதை ஒப்புக்கொண்டனர். மேலும், பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தில் அந்த ரூ. 7 கோடிக்கான வரியைச் செலுத்துவதாகவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர் என அவர்கள் தெரிவித்தனர்.
கரீப்யோஜனா திட்டம்
பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின்படி, அந்த ரூ.7 கோடியில் ரூ.3.5 கோடி வரியாகவும், மீதமுள்ள தொகையில், 25 சதவீதம் 4 ஆண்டுகளுக்கு வட்டியில்லா டெபாசிட்டாகவும் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.