முதன்முறையாக சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) செல்கிறார் இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Subhanshu Shukla: First Indian to Visit International Space Station: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். இதன்மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற இருக்கிறார். ஏக்ஸியம் ஸ்பேஸ், நாசா இணைந்து ஜூன் மாதத்திற்குள் 'ஸ்பேஸ் எக்ஸ் டிராகன்' என்ற விண்கலத்தை சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்ப உள்ளது.
சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர்
இந்த ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் 4 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்கின்றனர். இதில் சுபான்ஷு சுக்லாவும் ஒருவர். அதாவது சுபான்ஷு சுக்லா பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் விமானியாக செல்ல உள்ளார். Ax-4 விண்வெளி பயணத்தை முன்னாள் நாசா விண்வெளி வீரர் பெக்கி விட்சன் வழிநடத்துவார், போலந்தைச் சேர்ந்த சவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த திபோர் கபு ஆகியோர் பணி நிபுணர்களாக இருப்பார்கள்.
விண்வெளியில் 14 நாள் தங்கியிருந்து ஆராய்ச்சி
சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேரும் விண்வெளியில் 14 நாள் தங்கியிருந்து பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த பயனத்தின்போது விண்வெளியில் யோகா செய்து இந்தியாவின் கலாசாரத்தை உலகம் முழுவதும் அறியச்செய்ய சுபான்ஷு சுக்லா திட்டமிட்டுள்ளார். இது மட்டுமின்றி இந்தியா சார்பில் சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்படும் ககன்யான் விண்கலத்திலும் விண்வெளிக்கு சுபான்ஷு சுக்லா பயணம் செய்ய இருக்கிறார்.
யார் இந்த சுபான்ஷு சுக்லா?
1984 ஆம் ஆண்டில் விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியரான ராகேஷ் சர்மாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உலகளாவிய விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியாவின் வளர்ந்து வரும் பங்கை சுபான்ஷு சுக்லா பங்கேற்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்திய விமானப்படையில் நீண்ட அனுபவம் பெற்ற சுபான்ஷு சுக்லா, உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர். 39 வயதான இவர் 2006ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணியில் சேர்ந்தார். சுகோய்-30 எம்கேஐ, மிக்-21எஸ், மிக்-29எஸ், ஜாகுவார், ஹாக்ஸ் டோர்னியர்ஸ் மற்றும் என்-32ஆகிய போர் விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர் சுபான்ஷு சுக்லா.
சுபான்ஷு சுக்லா சொன்னது என்ன?
''விண்வெளிக்குச் செல்லும் ஒரு தனிநபராக நான் இருந்தாலும், இது 1.4 பில்லியன் மக்களின் பயணம்'' என்று சுபான்ஷு சுக்லா மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்த பயணத்தின் மூலம், இந்தியா உலகளாவிய விண்வெளி சமூகத்தில் தனது இருப்பை தொடர்ந்து வலுப்படுத்தி, எதிர்கால தலைமுறை விண்வெளி ஆர்வலர்கள் மற்றும் விண்வெளி வீரர்களை ஊக்குவிக்கிறது.