மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் பிரசாரம் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி (நாளை மறுநாள்) நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் பிரசாரம் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 7ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் விதிமுறைகளின்படி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்தில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்தில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
undefined
ஜாம்நகர் விமான நிலையத்தை சர்வதேச நிலையமாக மாற்றியது எப்படி? பதிலளிக்க டிஜிசிஏ மறுப்பு!
உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 இடங்களும், மேற்கு வங்கத்தில் 9 இடங்களும், பீகாரில் 8 இடங்களும், ஒடிசாவில் 6 இடங்களும், இமாச்சலப் பிரதேசத்தில் 4 இடங்களும், ஜார்க்கண்டில் 3 இடங்களும், சண்டிகரில் ஒரு இடத்துக்கும் ஜூன் 1ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இறுதிகட்ட தேர்தலில் பிரதமர் மோடி உள்பட மொத்தம் 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதுதவிர, ஒடிசாவில் உள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இறுதிகட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன. ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முடிந்த பின்னர், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகும். அதன் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.