
மும்பை அருகே கால்சென்டரிலிருந்து பேசி அமெரிக்கர்களிடம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி செய்த 70 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தானே மாவட்டம் மிராரோட்டில் உள்ள குறிப்பிட்ட சில கால்சென்டர்களில் பணிபுரியும் ஊழியர்கள், அமெரிக்கர்களை தொடர்பு கொண்டு அந்த நாட்டு வருமான வரித்துறை அதிகாரிகள் போல் பேசி கோடிக்கணக்கில் பணமோசடி செய்துள்ளனர். வருமான வரி செலுத்தாதவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி தினசரி 1 கோடி ரூபாய் வரையிலும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் இதனை கண்டுபிடித்த அமெரிக்க போலீசார், தானே காவல்துறை ஆணையரை தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட சில கால்சென்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து, 3 கால்சென்டர்களில் அதிரடி சோதனை நடத்திய தானே போலீசார் 70 பேரை கைது செய்தனர். 600-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், கால்சென்டர்களில் இருந்து 851 ஹார்டு டிஸ்க்குகள், பல்வேறு சர்வர்கள், மடிக்கணினிகள், செல்ஃபோன்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.