5 ஆண்டுகளுக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு... நீதித்துறையை மேம்படுத்த கோடிகளை ஒதுக்கிய மத்திய அரசு...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 14, 2021, 7:33 PM IST
Highlights

நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 
 

நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்தை 01.04.2021 முதல் 31.03.2026 வரை ரூ. 9000 கோடி செலவில் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் மத்திய அரசின் பங்கான ரூ. 5357 கோடியில் கிராம நியாயாலயா திட்டங்களுக்கு‌ ரூ. 50 கோடி வழங்கப்பட உள்ளது. நிதி வழங்கலுக்கான தேசிய இயக்கம் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் வாயிலாக கிராம நியாயாலயா திட்டங்கள், இயக்க கதியில் அமல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏராளமான நீதிமன்றங்கள் வாடகை வளாகங்களில் போதிய இட பற்றாக்குறையாலும், அடிப்படை வசதிகள் இன்றி சிதிலமடைந்த நிலைகளிலும் இயங்கி வருகின்றன. தற்போதைய அரசு, நீதித்துறைக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கவும் அனைவருக்கும் உரிய காலத்தில் நீதி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காகவும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வழக்குகள் மற்றும் நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும் வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இன்றியமையாதது.

3800 நீதிமன்ற அரங்குகள், மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களின் நீதி அதிகாரிகளுக்கு 4000 குடியிருப்பு பிரிவுகள் (ரூ. 4500 கோடி மதிப்பில்), 1450 வழக்கறிஞர் அரங்குகள் (ரூ. 700 கோடி மதிப்பில்), 1450 கழிவறைகள் (ரூ. 47 கோடி மதிப்பில்), மற்றும் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் 3,800 மின்னணு கணிப்பொறி அறைகளை அமைக்க  இந்தத் திட்ட முன்மொழிவு  உதவிகரமாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நீதித்துறையின் செயல் திறனை மேம்படுத்துவதிலும், புதிய இந்தியாவிற்கு மேம்பட்ட நீதிமன்றங்களை கட்டமைக்கவும் இந்த முயற்சி ஏதுவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிராம நியாயாலயா திட்டங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ரூ. 50 கோடி செலவில் உதவிகளை அளிக்கவும் அமைச்சரவை அனுமதி அளித்தது. எனினும் அறிவிக்கப்பட்ட கிராம நியாயாலயா பயன்பாட்டிற்கு வந்த பிறகு, அதற்கான அதிகாரி நியமிக்கப்பட்ட பிறகு, நீதித்துறையின் கிராம நியாயாலயா தளத்தில் அறிவிப்பு வெளியான பிறகே இந்த நிதி மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து ஒரு வருடம் கழித்து ஆய்வு செய்யப்படும்.

கடந்த 1993-94 ஆம் ஆண்டில் பயன்பாட்டிற்கு வந்த நீதித்துறையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான மத்திய நிதியுதவித் திட்டத்திற்காக  2014-ஆம் ஆண்டு வரை சுமார் இருபது ஆண்டுகளில் ரூ 3444 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியது. அதற்கு மாறாக தற்போதைய அரசு கடந்த 7 ஆண்டுகளில் இதுநாள் வரை சுமார் 60% ஒப்புதல்களுக்கு ரூ. 5200 கோடியை வழங்கியுள்ளது.

கிராம நியாயாலயா சட்டம், 2008, இந்தியாவின் ஊரக பகுதிகளில் விரைவான மற்றும் அனைவரும் எளிதில் அணுகும் வகையிலான நீதிமுறை வழங்கப்படுவதற்காக கிராம நியாயாலயாக்களை உருவாக்குவதற்கான சட்டம் ஆகும். 455 கிராம நியாயாலயாக்கள் பற்றிய அறிக்கையை வெளியிட்டு 13 மாநிலங்கள் இத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இவற்றில் 226 கிராம நியாயாலயாக்கள் தற்போது இயங்கி வருகின்றன. இந்த மத்திய நிதியுதவித் திட்டம் தொடங்கப்பட்டது முதல் மொத்தம் ரூ. 81.53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

click me!