
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கான்பூரில் இன்று நடைபெற்ற 3வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3வது ஒரு நாள் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதை அடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினர் ரோஹித் சர்மாவும் தவானும். இதில் தவான் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் நிலைத்து நின்று அதிரடி காட்டி ஆடிய ரோஹித் சர்மா 2 சிக்சர் 18 பவுண்டரிகளுடன் 147 ரன் எடுத்தார். ரோஹித்துடன் இணைந்து விளையாடிய கேப்டன் விராட் கோலி 113 ரன் எடுத்து அசத்தினார். இருவரும் இணைந்து 230 ரன் எடுத்தனர். ஹர்தீக் பாண்டியா 8 ரன்னில் வெளியேற, தோனி -25, ஜாதவ்-18 கார்த்திக்- 4 ரன்கள் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 337 ரன் எடுத்தது.
இதை அடுத்து, 338 ரன் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கியது நியூசிலாந்து அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குப்தில் -10, மன்ரோ -75 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின் வில்லியம்சன் - 64, டெய்லர் - 39, லாதம் - 65 நிக்கோல்ஸ் -37 சாண்ட்னர் - 9 ரன்களில் ஆட்டமிழந்தனர். கிராண்ட்ஹோம் - 8 சவுதீ - 4 ரன்களுடன் களத்தில் இருந்தனர். இருப்பினும் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 331 ரன் எடுத்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணியில் பும்ரா, சிறப்பாகப் பந்து வீசி, கடைசிக் கட்டத்தில் விக்கெட் வீழ்த்தினார். அவர் 47 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் 3 வது போட்டியில் வென்று, 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.