
பாகிஸ்தானைச் சேர்ந்த 431 இந்துக்களுக்கு நீண்ட கால விசாவை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் இந்தியாவில் ஆதார் கார்டுகளை பெறலாம், சொத்துக்களையும் வாங்க முடியும்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் நலனுக்காகவும் நரேந்திர மோடி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது-
புதிய வெளியுறவுக்கொள்கை
மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த புதிய வெளியுறவுக் கொள்கை மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் வசிக்கும் சிறுபான்மை இந்துக்கள், சீக்கியர்கள், புத்தமதத்தவர்கள், ஜைனர்கள், பார்சியர்கள், கிறிஸ்துவர்கள் நீண்டகால விசா அடிப்படையில் இந்தியாவில் தங்க அனுமதிக்கிறது.
431 இந்துக்கள்
அந்த அடிப்படையில் கடந்த மாதம் 431 பாகிஸ்தானிய இந்துக்களுக்கு நீண்ட கால அடிப்படையில் மத்திய அரசு விசா வழங்கி இருக்கிறது. இவர்கள் இந்தியாவில் வாழ்வதற்கு ேதவையான வேலைவாய்ப்புகளை பெற முடியும், சுயவேலைவாய்ப்புகளையும் உருவாகிக்கொள்ள முடியும்.
அதேசமயம், இவர்கள் அரசின் தடை செய்யப்பட்ட, பாதுகாக்கப்பட்ட இடங்கள், குறிப்பாக ராணுவ முகாம்கள் இருக்கும் இடங்களில் நிலம், சொத்துக்கள் வாங்க அனுமதி இல்லை.
பான்கார்டு, ஆதார் கார்டு
ஆனால், இந்த சிறுபான்மையினர்கள் பான் கார்டு, ஆதார் எண்,ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றை அரசிடம் இருந்து பெற முடியும். சுயவேலைவாய்ப்பு செய்யவும், வர்த்தகம் செய்யவும், நாட்டில் எந்த மாநிலத்துக்கும் சுதந்தரமாகச் சென்று வரவும், தங்கவும், ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு விசா ஆவணங்களை மாற்றிக்கொள்ளவும் முடியும்.
மேலும், நீண்ட கால விசா பெற்ற 431 பாகிஸ்தானிய முஸ்லிம்கள் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமலேயே வங்கிகளில் கணக்கு தொடங்கலாம்.
1,800 பேர்
பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 29-ந்தேதி தொடங்க உள்ள 123-வது ‘ஜல்சா சல்னா’ திருவிழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த அகமதியா சமூகத்தைச் சேர்ந்த 1,800 பேருக்கு பாதுகாப்பு சான்றிதழை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. கடந்த ஆண்டு இந்த விழாவில் பங்கேற்க யாருக்கும் விசாகொடுக்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பதற்றம்
இந்தியாவின் பதான் கோட் ராணுவ தளம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், உரி ராணுவ தளம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் ஆகிய சம்பவங்களுக்கு பின் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவில் பெரிய விரிசல் விழுந்தது. இதற்கிடையே காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தளபதி புர்கான் வானியை ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற பின், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவியுள்ளது.
இந்த நிலையிலும், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு மத்திய அரசு விசா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4 ஆயிரம்
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு விசா வழங்கியுள்ளது. 6025 விசா மனுக்கள் வந்ததில், 4057 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு விசா வழங்கப்பட்டுள்ளது.