
அக்டோபர் மாத இறுதியானாலே தேவர் ஜெயந்தியால் தமிழகம் பரபரப்பாவதுதான் வழக்கம்! ஆனால் இந்த வருடம் சிங்கப்பூரையும் கலக்கி வருகிறதாம் தேவர் ஜெயந்தி. இது தொடர்பாக கடல் தாண்டி ஒரு வாட்ஸ் அப் பகிர்வு ஒன்று வைரலாகி வருகிறது. அதிலுள்ள தகவல்கள் அதிர வைக்கின்றன.
எப்படி?...
சிங்கப்பூர் போலீஸ் ஃபோர்ஸின் நடவடிக்கைகள் நிர்வாகத்துறையின் உதவி இயக்குநரான சுப்ரின் டெண்டண்ட் லூயிஸ் லொக் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பொது அறிவிப்பை தமிழில் வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரின் போலீஸ் ஹெட்குவார்ட்டர்ஸிலிருந்து வெளியாகி இருக்கும் அந்த அறிவிப்பில் ...தேவர் ஜெயந்தி தொடர்பில் போலீஸ் அனுமதியின்றி பொதுகூட்டம் நடத்துவது மற்றும் அதில் பங்கேற்பது தொடர்பாக சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரில் போலீஸ் அனுமதியின்றி பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது அல்லது அதில் பங்கு கொள்வது சட்ட விரோதமான செயல் என்பதை நினைவூட்டும் அந்த அறிக்கை, தேவர் ஜெயந்தி அல்லது அதன் தொடர்பான காரணங்களுக்கு ஆதரவாக அல்லது எதிராக கூட்டம் கூடுவதும், முழக்க அட்டைகள் ஏந்துவதும் புகைப்படங்கள் எடுப்பதும் குற்றமாகும் என்று கூறியுள்ளது.
ஹொங் லிம் பூங்காவிலுள்ள பேச்சாளர் சதுக்கத்தில் சிங்கப்பூர் குடிமக்களும், நிரந்தரவாசிகளும் மட்டுமே கூட்டங்களில் பங்கு கொள்ள அனுமதிக்கப்படுவர், போலீஸ் அனுமதி வழங்கப்பட்டாலன்றி வெளிநாட்டினர் அங்கு கூட்டங்களில் பங்கேற்பது குற்றமாகும் என கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் இறுதியாகவும், உறுதியாகவும் ஒரு விஷயம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது...
“சிங்கப்பூருக்கு வருகையாளர்களாக வருவோர் அல்லது இங்கு வசிக்கும் வெளிநாட்டினர் எமது சட்டதிட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் அரசியலை சிங்கப்பூருக்கு கொண்டு வரக்கூடாது. சட்டத்தை மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். வேலை அனுமதியும் ரத்து செய்யப்படலாம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையை விஷமிகள் யாரோ போலியாக தயாரித்து பரப்பிவிடுகிறார்கள் என்று ஒரு தரப்பு சொல்ல, பெரும்பான்மையானவர்களோ இந்த அறிக்கை உண்மையே! தமிழகத்தின் தேவர் ஜெயந்தி விழா சிங்கப்பூரில் பெரும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது என்கிறார்கள்.