
பெண்களின் பெயரில் சொத்துக்கள் வாங்கினால், பத்திரப் பதிவுக்கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று ஜார்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது.
பெண்களின் முன்னேற்றத்துக்காகவும், அதிகாரம் அளிக்கவும் இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜனதா கட்சி ஆட்சி நடக்கிறது. அங்கு முதல்வராக ரகுபர் தாஸ் இருந்து வருகிறார். கடந்த வியாழக்கிழமை வருவாய் துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதல்வர் ரகுபர்தாஸ் ராஞ்சி நகரில் ஆலோசனை நடத்தினார். அந்தகூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிட்டப்பட்டது.
இது குறித்து ஜார்கண்ட் மாநில அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “ பெண்களின் பெயரில் எந்த விதமான அசையா சொத்துக்கள் வாங்கினாலும், அதற்கு பதிவுக் கட்டணம் கிடைாயது, ஸ்டாம்ப் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். அதிலும் வெறும் ஒரு ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து நிலவரைபடங்களையும் டிஜிட்டல் மயமாக்கவும் , பத்திரப்பதிவு முறை அனைத்தையும் டிஜிட்டல்மயமாக்கவும் முடிவு செய்யப்பட்டது.