
உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற திருமணத்தில் மணமகள் கழுத்தில் மாலை போட்ட மணமகனுக்கு பளார் என அறைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் பகுதியில் கோலாகலமாக திருமணம் ஒன்று நடைபெற்றது. மணமகன் வீட்டார், மணமகள் வீட்டார் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து, மணமகனும், மணமகளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மணமகனுக்கு பளார்
அப்போது தன்னிடம் இருந்த மாலையை, மணமகள் கழுத்தில் மாப்பிள்ளை போட்டார். பதிலுக்கு தனது கழுத்தில் மாலை வாங்குவதற்காக சற்று குனிந்தவாறு மாப்பிள்ளை நின்றார். ஆனால், மணமகளோ மாலை போடுவதற்கு பதிலாக மாப்பிள்ளையின் கன்னத்தில் பளார் என அறைந்தார். மீண்டும் இரண்டு முறை அறைந்து விட்டு கோபத்தில் மணமகள் மேடையில் இருந்து இறங்கி சென்றார்.
வீடியோ வைரல்
இதனால் மாப்பிள்ளையும், அங்கு சுற்றி நின்றிருந்த நண்பர்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், பெண் வீட்டார் மணமகளை சமாதானம் செய்து மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து திருமணம் சுபமாக முடிந்தது. மணமகன் மணமகளிடம் அறை வாங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.