
பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி அரசு முறை பயணமாக ஜம்மு-காஷ்மீருக்கு செல்வதை அடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு காஷ்மீர் மாநிலத்தின் சம்பா மாவட்டத்துக்கு உட்பட்ட பாலி கிராமத்தில் சிறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க பிரதமர் மோடி காஷ்மீர் செல்கிறார். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு பிரதமர் மோடி வரும் 24 ஆம் தேதி அங்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். அதனால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு விமான நிலையத்தில் இருந்து நேராக பாலி கிராமத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கே 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்ட கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். மேலும் இதில் நாடு முழுவதிலும் இருந்து 700 பஞ்சாயத்துகளின் உறுப்பினர்களும் காணொலி மூலம் பங்கேற்கின்றனர். காஷ்மீரின் தலைநகர் ஜம்முவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள பாலி கிராமம், காஷ்மீரின் முதலாவது கார்பன் இல்லா சோலார் பஞ்சாயத்து என்ற நிலையை எட்டியுள்ளது. முன்னோடி கிராமமான இந்த பஞ்சாயத்தில், ரூ.2.75 கோடியில் அமைக்கப்பட்டு வரும் இந்த மின்நிலைய பணிகளை 25 பேர் கொண்ட குழு இரவு பகலாக அமைத்து வருகிறது.
இந்த மின் நிலையத்தை 24 ஆம் தேதி அன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதை தொடர்ந்து ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான தொழில்துறை முதலீடுகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். அத்துடன், 2 மின் திட்டங்கள் உள்பட சில வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் முதன் முதலாக பிரதமர் மோடி அரசு முறை பயணம் மேற்கொள்வதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முன்னதாக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவதற்காக 2019 அக்டோபர் மற்றும் 2021 நவம்பர் மாதங்களில் அவர் காஷ்மீர் எல்லைக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.