
உத்தரப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த திருமணம் ஒன்று வரதட்சணைக் கோரிக்கைகள் மற்றும் மணமகன் உடல் பருமன் குறித்த கேலி காரணமாக நிறுத்தப்பட்டதில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் எதிராகப் போலீஸில் மாறி மாறிப் புகார் அளித்துள்ளனர்.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க மணமகள் அளித்த புகாரின்படி, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த திருமணத்திற்காக மணமகள் வீட்டார் நள்ளிரவு வரை காத்திருந்தனர். திருமண ஊர்வலம் வந்தவுடன், மணமகனின் குடும்பத்தினர் ரூ. 20 லட்சம் ரொக்கம் மற்றும் புதிய கார் வேண்டும் என்று திடீரென வரதட்சணை கோரியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மணமகள் திருமணத்தை ரத்து செய்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகப் பரவியது.
29 வயதான மணமகன் இதற்கு முற்றிலும் மாறுபட்ட குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். தான் குண்டாக இருப்பதால், திருமணம் செய்ய மணமகளுக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
"நிச்சயதார்த்தம் முதல் அவரது குடும்பத்தினர் என்னை உடல்ரீதியாகக் கேலி செய்தனர். மணமகளுக்கு என் தோற்றம் பற்றிப் பரவாயில்லை என்று முதலில் கூறினார். ஆனால் திருமண நாளில் திடீரென, நான் குண்டாக இருப்பதாகச் சொல்லித் திருமணம் செய்ய மறுத்துவிட்டார்." என அவர் கூறுகிறார்.
"இதன் பின்னர், செலவு செய்யப்பட்ட தொகையை ஈடுகட்ட, மணமகளின் குடும்பம் வரதட்சணை நாடகத்தை நடத்தியது. தற்போது சமரசத்திற்காக ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர்," என்றும் மணமகன் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மணமகள் வீட்டில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டதாகவும், அவர்களது மதிப்புமிக்க பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் அவர் எதிர் புகார் அளித்துள்ளார்.
மணமகளின் புகாரின் பேரில், வரதட்சணைச் சட்டம் உள்பட தொடர்புடைய சட்ட விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மணமகன் தரப்பிலும் எதிர் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வரை வரதட்சணை தொடர்பான எந்த ஒரு ஆதாரமும் வெளியாகவில்லை, விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. பெண் சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால் விரைவாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாக்குமூலங்களைப் பதிவு செய்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.
திருமண ஊர்வலத்தின்போது மணமகன் உறங்கிவிட்டார். இதனால் அவர் மது போதையில் இருப்பதாக மணமகள் குடும்பத்தினர் நினைத்ததே இந்த முழு குழப்பத்திற்கும் காரணம் என்றும் கூறப்படுகிறது.