மகாத்மா காந்தி மீது வன்மம்.. 100 நாள் வேலை திட்டம் மாற்றத்துக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்!

Published : Dec 15, 2025, 06:12 PM IST
MK Stalin

சுருக்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயர் மற்றும் நிதிப் பகிர்வு விகிதத்தை மாற்றும் மத்திய அரசின் முடிவுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மத்திய அரசு மாற்றி, திட்டத்தின் நிதிப் பகிர்வு விகிதத்தில் மாற்றம் கொண்டு வந்ததற்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேசத் தந்தை காந்தியடிகளின் மீதான காழ்ப்புணர்ச்சியால் மத்திய பாஜக அரசு இந்தத் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்குவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

காந்தியடிகள் மீது வன்மம்

புதிய மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!

100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!

தமிழ்நாட்டிற்கு அநீதி

நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்.

பல கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்ட ஒரு திட்டத்தை மத்திய அரசு ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது.

மக்கள் பின்வாங்க வைப்பார்கள்

மூன்று வேளாண் மசோதாக்கள், சாதிவாரி கணக்கெடுப்பு போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்!

எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே இந்த திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!”

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஆபாச AI படங்களுக்கு ஆப்பு! எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்துக்கு மத்திய அரசு வார்னிங்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!