
ஒலியைக் காட்டிலும் வேகமாகச் செல்லும் திறன்படைத்த சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை, சுகோய்-30எம்.கே.ஐ. போர் விமானத்தில் செலுத்தி இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்தது.
இதற்கு முன் நிலம் மற்றும் கடல் வழி இலக்கை மட்டுமே வைத்து சோதித்து பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வான்வழி மார்க்கமாகவும் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது-
உலகிலேயே மிகவேகமாகச் செல்லக்கூடிய, ஒலியைக் காட்டிலும் வேகமாகச் செல்லும் சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணை இன்று சுகோய்-30எம்.கே.ஐ. போர் விமானம் மூலம் வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
3,200 கி.மீ இலக்கை துல்லியமாக தாக்கும் திறன்படைத்த பிரம்மோஸ் ஏவுகணை இருபிரிவுகளைக் கொண்டது. வானில் இருந்து சுகோய் போர்விமானத்தில் ஏவப்பட்டதும், வங்காள விரிகுடா கடலில் வைக்கப்பட்டு இருந்த இலக்கை துல்லியமாகத் பிரம்மோஸ் ஏவுகணை தாக்கியது.
முதல் முறையாக சுகோய் போர்விமானத்தில் ஏவி சோதிக்கப்பட்டது வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த சோதனை மூலம் விமானப்படைக்கு புதிய ஊக்கமும், நம்பிக்கையும் கிடைத்துள்ளது. 2.5 டன் எடை கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையை, சுகோய் போர்விமானம் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.
இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்பும், ரஷியாவின் என்.பி.ஓ.எம். பிரிவின் கூட்டு தயாரிப்பில் பிரம்மோஸ் ஏவுகணை உருவாக்கப்பட்டது. இதுவரை நீர்,நிலம், வான் ஆகிய 3 பிரிவுகளிலும் முழுமையாக எந்த ஏவுகணையும் சோதித்து பார்க்கப்படவில்லை. முதல் முறையாக இந்த மூன்றிலும் பிரம்மோஸ் ஏவுகணை மட்டுமே வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி அடைந்ததற்கு மத்திய பாதுகாப்பு துறைஅமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு அமைப்புக்கு வாழ்த்துத் தெரிவித்தள்ளார்.
அதிக சக்தியும், நவீனமும் படைத்த சுகோய்-30எம்.கே.ஐ. போர் விமானத்தில், சூப்பர் சோனிக் பிரம்மோஸ் ஏவுகணையை செலுத்தும் பட்டத்தில் எதிரி நாட்டுக்கு மிகப்பெரிய அழிவை ஏற்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.