ராஜஸ்தான் மாநிலத்தில் பள்ளி மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சக மாணவன் சிறுநீர் கலந்த விவகாரத்தில் போராட்டம் வெடித்துள்ளது
ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் மாவட்டம் லுஹாரியா கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சக மாணவன் சிறுநீரை கலந்ததாகவும், அதனை அந்த மாணவி தவறுதலாக குடித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்த மாணவியின் பையில் காதல் கடிதம் இருந்ததாகவும் தெரிகிறது. அந்த மாணவனும், மாணவியும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திங்கள் கிழமை இன்று பள்ளி திறந்ததும் மாணவியின் சமூகத்தை சேர்ந்தவர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளியை மூடிவிட்டதாக தெரிகிறது. போராட்டக்காரர்கள் பள்ளியின் மீது தக்குதல் நடத்தினர். தொடர்ந்து, அந்த போராட்டம் வன்முறையாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதனிடையே, குற்றம் சாட்டப்படும் மாணவனின் வீடு இருக்கும் பகுதிக்கு சென்ற போராட்டக்காரர்கள் மாணவரின் வீடு மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். ஆனால், இதுகுறித்து மாணவர் தரப்பில் எவ்வித புகாரும் அளிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர். ஒருவேளை புகார் அளிக்கப்படும் பட்சத்தில் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.