
உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக நமது இந்தியாவின் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் அமைந்துள்ளது. இந்தியாவுக்கு வரும் பல்வேறு நாட்டின் சுற்றுலா பயணிகள், அக்ரா சென்று அங்குள்ள தாஜ்மஹாலை பார்க்காமல் செல்வதில்லை.
இதையொட்டி நேற்று, தாஜ்மஹாலுக்கு, தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனால், டெல்லியில் இருந்து ஆக்ரா செல்லும் நெடுஞ்சாலை மற்றும் தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஆக்ரா ரயில் நிலையத்தில் ஏராளமான பயணிகள், ரயிலுக்காக காத்திருந்தனர். எப்போதும் போல் பரபரப்பாக இருந்தது. அப்போது, திடீரென ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்தடுத்து 2 இடங்களில் பலத்த சத்தம் கேட்டது.
இதனால், அங்கிருந்த பயணிகளும், அதிகாரிகளும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தாஜ்மகாலுக்கு மிரட்டல் வந்திருந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால், டெல்லி முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.