
கர்நாடக அரசின் நிர்வாக மொழியாக கன்னடம் தான் இருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும் அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கன்னட மொழியை கற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கான செயலாளராக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்ரீவஸ்தா கிருஷ்ணா. இவர் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் தனக்கு வரும் அனைத்து கோப்புகளும் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.
இவ்விவகாரம் வெளியே கசிந்த நிலையில் கன்னட அபிவிருத்தி ஆணையம் ஸ்ரீவஸ்தாவுக்கு அதிரடியாக நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் ஆங்கில மொழியை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்று கூறியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடக ஆட்சி மொழியாக கன்னடம் தான் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் கன்னட மொழியை கற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.