
உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் அமைச்சராக திரிவேந்திர சிங் ராவத் இன்று பதவியேற்க உள்ளார்.
70 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரகாண்டில் நடத்தப்பட்ட தேர்தலில் பா.ஜ.க. 57 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹரீஷ் ராவத் தலைமையிலான காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்தது.
இதனையடுத்து முதல் அமைச்சராக யாரை தேர்ந்தெடுப்பது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது பெரும்பாலான மூத்த தலைவர்கள் திரிவேந்திர சிங் ராவத்தை முன்மொழிந்தனர். இதற்கு டெல்லி தலைமையும் அனுமதி அளிக்க திரிவேந்திர ராவத் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் கிருஷ்ண காந்த் பாலை நேற்று இரவு திரிவேந்திர சிங் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர் ஆட்சி அமைக்க கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் டேராடூனில் இன்று பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. தலைவர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.