மகராஷ்டிராவுக்கு புதிய சபாநாயகர்... அதிக வாக்குகள் பெற்ற பாஜகவின் ராகுல் நர்வேகர் தேர்வு!!

By Narendran SFirst Published Jul 3, 2022, 12:19 PM IST
Highlights

மகாராஷ்டிராவின் புதிய சபாநாயகராக 160க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற பாஜகவை சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிராவின் புதிய சபாநாயகராக 160க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற பாஜகவை சேர்ந்த ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40க்கும் மேற்பட்ட சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்கொடி தூக்கினர். இதனால், மகா விகாஸ் கூட்டணி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்தார். மகாராஷ்டிர ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்புக்கெதிராக சிவசேனை கட்சியின் தலைமை கொறடா உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிரான சிவசேனையின் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உத்தரவிட்டு, வழக்கை வரும் ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதையும் படிங்க: நுபுர் ஷர்மாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்… கொல்கத்தா காவல்துறை அதிரடி!!

இதை அடுத்து உத்தவ் தாக்கரே தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகைக்கு சென்ற உத்தவ் தாக்கரே தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் பகத் சிங் கோஷியாரியிடம் சமா்ப்பித்தாா். இதனை அடுத்து ஆளுநர் பகத்சிங் கோஷியாரியை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸும், ஏக்நாத் ஷிண்டேவும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினர். பின்னர் சிவசேனா அதிருப்தி அணி தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும் பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: முதலில் அமராவதி மெடிக்கல் ஓனர் கொலை... அடுத்து ராஜஸ்தான் டெய்லர் கொலை... என்ன நடந்தது? விசாரிக்கிறது என்ஐஏ!!

இதனிடையே ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏக்கள் நேற்று இரவு கோவாவில் இருந்து மும்பை வந்தடைந்தனர். இவர்கள் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்று வாக்களிப்பர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையின் 2 நாள் சிறப்புக் கூட்டம் இன்று கூடியது. இதில், சட்டப் பேரவையின் புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது. சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நடைபெற்றது. அதன்படி புதிய சபாநாயகருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. சபாநாயகர் பதவிக்கு பாஜக மற்றும் மகா விகாஸ் அகாதி கூட்டணி போட்டிபோட்டது. இதில் பாஜகவை சேர்ந்த ராகுல் நர்வேகர் 160க்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றார். இதை அடுத்து அவர் மகாராஷ்டிராவின் புதிய சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். 

click me!