ஆடம்பர செலவுக்கு வரி குறைவாம்! குழந்தைங்க துன்ற பிஸ்கோத்துக்கு 18% வரியாம்... அது இது எது? திசைதிருப்பும் பாஜக

 
Published : Jun 08, 2017, 06:42 PM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
ஆடம்பர செலவுக்கு வரி குறைவாம்! குழந்தைங்க துன்ற பிஸ்கோத்துக்கு 18% வரியாம்... அது இது எது? திசைதிருப்பும் பாஜக

சுருக்கம்

BJPs alternative claim is diversion

மிகக்கவனமாக குறி பார்த்துக்கொண்டிருக்கும்போது, நம் தோள்களைப் பிடித்து யாராவது உலுக்கினால் எப்படியிருக்கும்? அதனால் திசைமாறி, நம் இலக்கு தவறிப்போனால் என்னவாகும்? இதுபோன்ற டெக்னிக்குகளை தொடர்ச்சியாகப் பயன்படுத்தியே, செக்கை சுற்றிவரும் மாடுகளைப் போல மக்களை ஆட்டிப் படைத்து வருகின்றன இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள். இந்த விஷயத்தில், ‘பலே’ டெக்னிக்குகளைப் பயன்படுத்துவதில் கில்லாடிக்கு கில்லாடியாகத் திகழ்கிறது மத்தியிலுள்ள பாஜக அரசு. இது வெறும் கற்பனையல்ல என்பதை, சில நூறு நாட்களுக்கு முன்பான நாட்டுநடப்புகளை உற்றுக் கவனித்தாலே புரியும்!

இதற்கான உதாரணங்களை அடுக்கினால், அது முடிவில்லாமல் தொடரும். அதற்குப் பதிலாக, மிகச்சமீபத்தில் நம்மை உலுக்கிய செய்திகள் சிலவற்றைப் பார்ப்போம். 

கடந்த 2015ம் ஆண்டு தமிழகத்தையே புரட்டிப்போட்ட டிசம்பர் மாத பெருமழை, அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த தமிழக சட்டமன்றத் தேர்தல், முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி அப்போல்லோ மருத்துவமனையில் சேர்ந்தது, அதன்பிறகு நம்மை முற்றிலுமாக செயலிழக்கச் செய்த 500 மற்றும் ஆயிரம் ரூபாய் மதிப்பிழப்பு விவகாரம் என்று நீண்டு, இன்னும் சில நாட்களில் அமலாகப்போகும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பினால் உண்டாகும் துன்பங்கள் என்று பல செய்திகள் நம் தலையில் பாறாங்கல்லாக அழுத்திக் கொண்டிருக்கின்றன.

தொடர்ச்சியான அழுத்தங்கள் கொதிப்பை அல்லவா உண்டாக்கும். இந்தப்பிரச்சனைகளை வெளியிலிருந்து உற்றுநோக்குபவருக்கு, இதுதான் தோன்றும். இதை மிக சாமர்த்தியமாக, ‘அது இது எது’ என்று கைகாட்டி திசைதிருப்புவதுதான் நம்மூர் கட்சிகளின் வேலை. இதனை மிகமிக திறமையாகக் கையாள்கிறது பாஜக என்பது தான், மற்ற கட்சியினரிடம் தேங்கியிருக்கும் ஆதங்கத்திற்குக் காரணம்.

ஒரு பிரச்சனையின் தீவிரத்தை நீர்த்துப்போகச்செய்ய, நமது பார்வையில் வேறொரு விவகாரம் வைக்கப்படும். இதுபற்றிய எந்த நுண்ணுணர்வும் இல்லாமல், நாமும் அதனை கைதட்டி ஆதரித்துவிடுவோம். இல்லை என்கிறீர்களா, இதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. 

சிம்பு - அனிருத் பீப் பாடல் விவகாரம் முதல் அதிமுக என்ற ஒரே கட்சியில் மூன்று அணிகளை உருவாக்கிய தினகரனின் பெருமை வரை நம்மை திசைதிருப்பிய விவகாரங்கள் ஏராளம். இதில் சில செய்திகள் ‘ஏ’ ரகமாக கூட இருக்கும். கோபத்தை தணிக்க கிளுகிளுப்பு தான் சரி என்ற வாதம் கூட, இதன் பின்னால் இருக்கிறது. சரி, நாம விஷயத்துக்கு வருவோம்! 

சிம்புவின் பீப் பாடல் பிரச்சனை உச்சம் பெற்றபோது தான், டிசம்பர் மாத மழை வெள்ளத்தின்போது தமிழக அரசு செயலற்றுக்கிடந்தது என்ற வாதம் மெதுமெதுவாக மங்கியது, மறைந்தும்போனது. மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் புனர்வாழ்வு பெற்றார்களா என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் முன்பே, பீப் பாடல் போன்று பல படைப்புகள் சிம்பு - அனிருத் கூட்டணியில் உருவானதாகத் தகவல்கள் வந்தன. இந்த விவகாரத்தில் அனிருத் தரப்பு கப்சிப்பென்று இருக்க (இப்போதுவரை அப்படித்தான் என்பது வேறு விஷயம்!?) சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் ‘ஆமாங்க’ என்று பதில் சொல்லி, மேலும் பல நாட்களுக்கு இந்த விவகாரத்தின் சூட்டை நீட்டித்தார். 

சுவாதி கொலை வழக்கும் ராம்குமார் மரணமும், இன்றும் தமிழகத்தின் பேசுபொருளில் ஒன்றாக இருக்கிறது. இந்த விஷயம் தினசரிகளின் முதல் பக்கத்தில் மட்டுமே வந்துகொண்டிருந்தபோது, அதனை புரட்டிப்போட்டது ஜெயலலிதா அப்போல்லோவில் சேர்க்கப்பட்ட தகவல். அடுத்த சில வாரங்களுக்கு, அ.தி.மு.க.வினர் செய்த பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும் புலம்பல்களுமே ஊடகங்களை ஆக்கிரமித்தது. அப்போது ஜெயலலிதாவின் உடல்நலம் பற்றி, உறுதிப்படுத்தப்படாத பல தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகின. ஆனாலும், அவற்றால் சிறு சலனத்தை மட்டுமே ஏற்படுத்த முடிந்தது. அந்த சலனத்தையும் சலசலக்க வைத்தது ’செல்லாத நோட்டு’ விவகாரம். 

நவம்பர் 8, 2016 அன்று இரவு 8 மணியளவில் இந்தியாவுக்கே அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் பிரதமர் மோடி. ‘நாடு முழுவதும் 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அவ்வளவுதான்! இது உண்மைச்செய்தியா, போலியான தகவலா என்று உறுதிப்படுத்திக்கொள்வதற்குள் ஏடிஎம் வாசல்களில் தேவுடு காக்கத் தொடங்கினர் குடிமகன்கள். 

அடுத்த இரண்டு நாட்களும் வங்கிகளுக்கு லீவு என்று அறிவிக்கப்பட்டு, அத்தியாவசியத் தேவைகளுக்கு பணம் இல்லாமல் அடுத்த ஆறு வாரங்களுக்கு மெஷினுக்குள் சிக்கிய கரும்பாகினர் நம்மவர்கள். இதன் தீவிரம் குறையும் முன்னரே, ஜெயலலிதாவின் மரணம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து, உடனடியாக ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் புதிய அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றது. சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் இடையே பனிப்போர் நடப்பதாகவும், அவரது அமைச்சரவை மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாகச் செயல்படுவதாகவும் செய்திகள் கசிந்தபோது, தைப்பொங்கல் பிறந்தது. கூடவே, ஜல்லிகட்டு நடக்குமா நடக்காதா என்ற சர்ச்சையும் சேர்ந்துகொண்டது.

அதன்பிறகு, அலங்காநல்லூரில் ஆரம்பித்த காளைகளின் போர்க்குரல் மெரீனாவிற்கு ‘ஷிப்ட்’ ஆகி, அங்கிருந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வைரலாகப் பரவியது நாமறிந்த கதை. மத்திய அரசு வெர்சஸ் மாநில அரசு விவகாரத்தை தணிக்கவே, ஜல்லிகட்டு விவகாரம் பயன்படுத்தப்பட்டதாகவும் கிளைக்கதைகள் விரிந்தன.  ஆனாலும், அந்தப்போராட்டம் முடிந்த கதை ஓராயிரம் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை விட்டுச்சென்றது. அந்த செய்திகளை இருட்டடிப்பு செய்ய, ஓ.பி.எஸ். ராஜினாமா, சி.எம். ஆகும் சசிகலா என்று அடுத்த ரவுண்ட் தொடங்கியது. அதற்கும் ஆப்பு வைக்கும் விதத்தில், சொத்துகுவிப்பு வழக்கு விசாரணையில் தீர்ப்பு வெளியாகும் என்று தகவல் இடியாய் வெளியானது. 

சசிகலா அடுத்த சி.எம். ஆவாரா என்ற கேள்வியுடன் அ.தி.மு.க. தொண்டர்கள் கனத்த இதயத்துடன் தவிக்க, அடுத்த சில நாட்களுக்கு கூவாத்தூர் ரிசார்ட் கொண்டாட்டம் பற்றிய செய்திகளுக்கும் குறைவில்லை. அந்த வழக்கின் முடிவில் சசிகலா பெங்களூரு சிறைக்கு செல்ல,  எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அணிவகுத்தது அ.தி.மு.க கட்சி. எதிர்த்து நின்ற ஓ.பி.எஸ்.ஸும் அவரது ஆதரவாளர்களும் இதனால் சிறிதும் பின்வாங்கவில்லை. இந்த அரசியல் விவகாரங்களினால் மக்கள் மனம் கொதிப்பில் இருக்க, அதனை கீழ்நோக்கி இறங்கச்செய்தது சுசிலீக்ஸ் விவகாரம். தினம்தோறும் ஒரு படம் என்று சில நாட்களுக்கு வைரல் அட்டாக்கை தொடர்ந்தது இந்த விவகாரம். முக்கியமான சில விஷயங்கள் வெளியாகும் என்ற அறிவிப்பிற்குப் பின்பு, அதுவும் புஸ்ஸானது. இடைப்பட்ட காலத்தில், இந்த விவகாரத்தில் சில சில்வண்டுகள் சிக்கிச் சின்னாபின்னாமானது வேறொரு துயரக்கதை. 

இப்போதும் இந்த ட்ரிக் தான் தொடர்கிறது. நெடுவயலில் மீத்தேன் எடுக்கும் முயற்சி என்னவானது என்று தெரியாத நிலையில், தஞ்சாவூர் கதிராமங்கலத்தில் அந்த கணக்கு மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு வரும் ஜூன் மாதத்தில் இருந்து நாடெங்கும் அமலாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. எந்தப் பொருட்களின் விலை உயரும் என்று நாளும் ஒரு செய்தி வெளியாவது தொடர, அதைப்பார்த்து அதிரும் மனங்களும் அதிகரிக்கின்றன. 

பெண்களின் அணிகலன்களுக்கான வரிவிதிப்பில் பெரிய பாதிப்பில்லாத நிலையில், அவர்களது அத்தியாவசிய தேவையான சானிடரி நாப்கினுக்கு 14.5 % வரி, குழந்தைகள் விரும்பும் பிஸ்கட்டுக்கு 18% வரி என்பது போன்ற தகவல்கள் சாதாரண மக்களிடம் புலம்பலைத் தான் உருவாகியுள்ளன. இப்படியொரு சூழலில்தான், சிறையில் இருந்து விடுதலையாகியிருக்கிறார் தினகரன். தன் பங்குக்கு சில எம்.எல்.ஏ.க்களை அவர் இழுக்க, அ.தி.மு.க.வில் மீண்டும் கவுண்ட்டவுன் ஸ்டார்ட் ஆகியிருக்கிறது. 

மாநில அரசும், மத்திய அரசும், அவற்றை மாற்றத் துடிக்கும் சக்திகளும் இதுபோன்ற செய்திகளையும் அவற்றை உருவாக்கித்தரும் சக்திபீடங்களையும் நம்பித்தான் இருக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டு ராகுல்காந்தி திடீரென்று வெளிநாடு சென்று திரும்பியது பற்றிய செய்திக் குவியல்களும் இதேபோன்று திசைதிருப்பும் ரகத்தைச் சேர்ந்தவை தான். இந்த சமயத்தில் தான், டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திய அதகளங்கள் மங்கலாகிப் போனது. இதுபோன்ற ஓராயிரம் செய்திகளைக் கொண்டு,  நாட்டை தனது மாயக்கரங்களுக்குள் அடக்கப் பார்க்கிறது பாஜக; தேர்ந்த யுக்திகளைப் பயன்படுத்தி வருகிறது என்பது எதிர்கட்சிகளின் மனக்குமுறல். 

இன்னும் சில நாட்களில் நிகழப்போகும் குடியரசுத்தலைவர் தேர்தல், அதில் எந்த வேட்பாளரை தமிழக அரசியல் கட்சிகள் ஆதரிக்கும், அதன்பின் அ.தி.மு.க. ஆட்சி என்னவாகும்? என்பது போன்ற பல கேள்விகள் விரைவில் விஸ்வரூபமெடுக்கப்போகின்றன.

இவை மக்களிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன என்பதைப் பொறுத்து, ஸ்டாக்கில் இருக்கும் சில கிளுகிளுப்பு செய்திகளுக்கு சிறகு முளைக்கலாம் அல்லது புதிய செய்திகள் பூதாகரமாக்கப்பட்டு பரப்பப்படலாம். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி என்ற நப்பாசையில் இருந்துவரும் பாஜக, இந்த ‘ட்ரிக்’குகளை மிகத் தாராளமாகப் பயன்படுத்தும் என்பதில் கண்டிப்பாக யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்காது!

PREV
click me!

Recommended Stories

இந்திய வீரர்களுக்கு 'அந்த' பழக்கவழக்கம்! எனது கணவர் ஒழுக்கமானவர்.. ஜடேஜா மனைவி பகீர் குற்றச்சாட்டு!
பாகிஸ்தானின் டுபாக்கூர்தனம்..! ஏஐ டீப்ஃபேக் வீடியோக்கள் மூலம் போலியாக போரை உருவாக்கிய கடற்படை..!