#UnmaskingChina: இந்திய பகுதிகளை சீனாவிடம் இழந்த காங்கிரஸ்.. கட்டி காப்பாற்றும் பாஜக..!

By karthikeyan VFirst Published Jun 19, 2020, 8:22 PM IST
Highlights

இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டதா என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு லடாக் பாஜக எம்பி ஜம்யங் ஸெரிங் நம்கியா தக்க பதிலடி கொடுத்துள்ளார். 
 

இந்திய - சீன எல்லையில் லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்தின் மீது சீனா அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் சீனா கடந்த மாதம் திடீரென ராணுவ வீரர்களை குவித்ததால் இந்தியாவும் ராணுவத்தை குவிக்க, அங்கு பதற்றம் ஏற்பட்டது. 

இதையடுத்து ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்த இரு நாட்டு ராணுவமும் விலகிச்செல்வதாக ஒப்புக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகினர். அப்படி விலகும்போதுதான், சீன ராணுவம் வேண்டுமென்றே இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தி சீண்டியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் சீன ராணுவத்தினர் சுமார் 40 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்பதையெல்லாம் கடந்து ஒற்றுமையாக ஒன்றிணைந்து சீனாவுக்கு எதிரான விவகாரத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் இந்த சூழலிலும் காங்கிரஸ் அரசியல் செய்யும் முனைப்பிலேயே இருக்கிறது என்பதை அக்கட்சியினரின் பேச்சுகளே பறைசாற்றுகின்றன. 

அந்தவகையில், இந்தியா - சீனா இடையேயான கல்வான் மோதலையடுத்து, இந்திய எல்லைக்குட்பட்ட லடாக் பகுதிகளை சீனா கைப்பற்றிவிட்டதா என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியிருந்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை குறிவைத்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு, லடாக் பாஜக எம்பி ஜம்யங் ஸெரிங் நம்கியால், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் சீனாவிடம் இந்தியா இழந்த பகுதிகளை பட்டியலிட்டு பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து லடாக் எம்பி ஜம்யங் பதிவிட்டுள்ள டுவீட்டில், ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நான் கூறும் உண்மைகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன். இனியும் ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று பதிவிட்டு, காங்கிரஸ் ஆட்சியில் சீனாவிடம் இந்தியா இழந்த பகுதிகளை பட்டியலிட்டுள்ளார். 

I hope and will agree with my reply based on facts and hopefully they won't try to mislead again. pic.twitter.com/pAJx1ge2H1

— Jamyang Tsering Namgyal (@MPLadakh)

1. 1962ல் காங்கிரஸ் ஆட்சியின் போது, 37,244 சதுர கிமீ பரப்பளவு கொண்ட “அக்சய் சின்” பகுதியை சீனாவிடம் இந்தியா இழந்தது.

சீனாவால் திபெத்தியர்கள் துன்புறுத்தப்பட்டபோது, 1959ல் தலாய்லாமாவிற்கு இந்தியா அடைக்கம் கொடுத்ததன் விளைவாகவும், அக்சய் சின் பகுதியை கைப்பற்றுவதற்காகவும் இந்தியாவுடன் மோதியது சீனா. அந்த போரில் இந்திய ராணுவ வீரர்கள் 3,250 பேர் வீரமரணம் அடைந்தனர். அக்சய் சின் பகுதியை இந்தியா சீனாவிடம் இழந்தது குறிப்பிடத்தக்கது. 

2. 2008ம் ஆண்டு வரை சுமார்(chumar) ஏரியாவின் தியா பங்நாக் மற்றும் சப்ஜி பள்ளத்தாக்கு பகுதிகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சீனாவிடம் இழந்தது இந்தியா.

3. டெம்ஜோக் பகுதியில் இருந்த ஜோராவர் கோட்டையை 2008ம் ஆண்டு சீன ராணுவம் தகர்த்தது. 2012ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் அந்த பகுதியில் சீன/நியூ டெம்ஜோக் காலனியை அமைத்து 13 வீடுகளும் கட்டப்பட்டன. 

4.  டங்க்டி மற்றும் டெம்ஜோக் பகுதிகளுக்கு இடையே அமைந்திருந்த பழமை வாய்ந்த தூம் செலேவையும் 2008-09 ஐ.மு.கூ ஆட்சியின்போது இந்தியா இழந்தது.

இவ்வாறு சீனாவிடம் இந்தியா இழந்த பகுதிகளை பட்டியலிட்டு, ராகுல் காந்திக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பதிலடி கொடுத்துள்ளார் லடாக் பாஜக எம்பி ஜம்யங் ஸெரிங்.

காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இந்தியாவின் ஏராளமான பகுதிகளை சீனாவிடம் இழந்த அதேவேளையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 2014லிருந்து இன்றுவரை சீனாவுக்கு எதிரான விவகாரங்களை சிறப்பாக இந்தியா கையாண்டு, இந்திய பகுதிகளை பாதுகாத்துள்ளதே தவிர ஒரு பகுதியை கூட இழக்கவில்லை. 

இந்தியா - பூடான் - சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையும் சந்திக்கும் முச்சந்தியான சர்ச்சைக்குரிய டோக்லம் பகுதிக்கு சீனாவும் பூடானும் உரிமை கோரும் நிலையில், இந்த விவகாரத்தில் பூடானுக்கு ஆதரவு அளிக்கும் இந்தியா, 2017ல் சீனா அந்த பகுதியில் சாலையமைக்க முயற்சித்தபோது, இந்திய ராணுவத்தை இறக்கி தடுத்தது. இதையடுத்து பதற்றம் உருவானதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில், இந்திய பகுதிகளை இழந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், அண்டை நாடான சிறிய பூடானுக்கு ஆதரவாக இறங்கி சீனாவின் நோக்கத்தை சிதைத்து அனுப்பியது இந்தியா. 

பூடான் பகுதியையே சீனாவுக்கு விட்டுக்கொடுத்த விடாத மோடி அரசு, இந்திய பகுதிகளை தாரைவார்த்துவிடுமா என்ன? அதன்பின்னர் பாங்கோங் த்சோ ஏரி பகுதியில் கூடாரத்தை போட்ட சீன ராணுவத்தை, பதிலுக்கு அதே பகுதியில் இந்திய ராணுவத்தை இறக்கிவிட்டு, பதிலடி கொடுத்து, அந்த பிரச்னையையும் தீர்த்தது மோடி அரசு. 

காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா இழந்ததை போல இந்திய பகுதிகள் எதுவும் பாஜக ஆட்சியில் இழக்கப்படவில்லை.
 

click me!