குடியரசு தலைவர் தேர்தல் விவகாரம் - எதிர்கட்சிகளை சந்திக்க பாஜக திட்டம்!!

First Published Jun 14, 2017, 4:47 PM IST
Highlights
BJP planning to meet opposite party leaders


குடியரசு தலைவர் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தும் முயற்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோரை பாரதியஜனதா சார்பில் 3 மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு நாளை சந்தித்து பேச உள்ளது.

பதவிக்காலம்
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 14-ந் தேதியும், குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ந் தேதியும் முடிகிறது.

இதையடுத்து புதிய குடியரசு தலைவர், துணைத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி, வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கி வரும் 28-ந்தேதி வரையிலும் நடைபெறும் எனவும், வேட்புமனு பரிசீலனை 30-ந் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 

17-ந்தேதி தேர்தல்

குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 17-ந்தேதியும், வாக்கு எண்ணிக்கை 20ந் தேதியும் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. 
அதன்படி குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. 

புதிய குழு

இதுவரை மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அது குறித்து முடிவு செய்ய மூத்த மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, எம். வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த குழு ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியாக நாளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை முதலில் சந்தித்து பேச உள்ளனர். அதன்பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் சந்தித்து பேச உள்ளனர் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், இது தொடர்பாக கடந்த 12-ந்தேதி நிதி அமைச்சர் ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வேட்பாளர் தேர்வில் கருத்து ஒற்றுமை ஏற்பட முயற்சித்துள்ளனர். 

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் படேல், பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஸ் சந்திர மிஸ்ரா ஆகியோருடனும் வெங்கையா நாயுடு பேச்சு நடத்திவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பா.ஜனதா குழுவுடன் பேச்சு நடத்தியபின், தங்கள் முடிவை தெரிவிப்பதாக பிரபுல் படேல், சதீஸ் மிஸ்ரா தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தீவிர ஆலோசனை

அதேசமயம், காங்கிரஸ் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சிகள், பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். குடியரசுத் தலைவருக்கு பொருத்தமான நபரை வேட்பாளராக கொண்டு வரும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருகிறார்கள். அதேசமயம், இதில் மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்ைக எடுக்கும் என்பதையும் கவனித்து வருகிறார்கள். 

வேட்புமனுத் தாக்கல்

மேலும், சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல் போல், குடியரசு தலைவர் தேர்தலில் யார் வேண்டுமானாலும் வேட்புமனுத்தாக்கல் செய்துவிடமுடியாது, அதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, தேர்தலில் வாக்களிக்கும் 50 பேரின் ஆதரவு இருப்பவர்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும். 

எதிர்க்கட்சிகள் சார்பிலும், ஆளும் பா.ஜனதா கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால் ஜூலை 17-ந்தேதி தேர்தலும், 20-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கும். 

click me!