பாஜக 437... காங்கிரஸ் 423... பாஜகவிடம் சாதனையைப் பறிகொடுத்த காங்கிரஸ்!

By Asianet TamilFirst Published Apr 25, 2019, 8:36 AM IST
Highlights

கடந்த மக்களவைத் தேர்தலில் 427 தொகுதிகளில் போட்டியிட்டு 282 தொகுதிகளை பாஜக வென்றது. காங்கிரஸ் கட்சி 450 தொகுதிகளில் போட்டியிட்டு 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
 

நாடாளுமன்றத் தேர்தல் முடிவடையும் முன்பே காங்கிரஸ் கட்சியை ஒரு விஷயத்தில் ஓவர் டேக் செய்து பாஜக சாதனைப் படைத்திருக்கிறது. இதுவரை அந்தச் சாதனையை தக்க வைத்திருந்த காங்கிரஸ் கட்சி, அதை பாஜகவிடம் பறிகொடுத்துவிட்டது. அது என்ன சாதனை என்றுதானே கேட்கிறீர்கள்?


 நாடாளுமன்றத் தேர்தலில் எப்போதும் காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அதிகமான தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம். 1952-ம் ஆண்டிலிருந்தே இதுதான் நிலை. காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் கிராமங்கள்வரை கிளை அமைப்புகள் இருந்ததால், இது சாத்தியமானது. 1990-களுக்கு பிறகு பாஜக வளர்ந்தபோது நாடு முழுவதும் போட்டியிடும் அளவுக்கு எண்ணிக்கை உயரவில்லை. பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை வழங்கிவிட்டு பாஜக குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டுவந்தது.
ஆனால், இந்தத் தேர்தலில் பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சி என்ற பெருமையை முதன் முறையாகக் கைப்பற்றியிருக்கிறது. இந்தத் தேர்தலில் 543 தொகுதிகளில் பாஜக 437 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதுவரை அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வந்த காங்கிரஸ் கட்சி இந்த முறை 423 தொகுதிகளில் மட்டுமே களமிறங்குகிறது. இதன்மூலம் பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியிடம் இருந்த இந்தப் பெருமையை பாஜக வசம் சென்றுள்ளது.

 
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி இன்னும் சில தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. அந்தத் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தாலும், பாஜக போட்டியிடும் எண்ணிக்கையைத் தொட முடியாது. எனவே இந்தத் தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிடும் கட்சி என்ற பெருமை பாஜகவுக்கே கிடைத்துள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 427 தொகுதிகளில் போட்டியிட்டு 282 தொகுதிகளை பாஜக வென்றது. காங்கிரஸ் கட்சி 450 தொகுதிகளில் போட்டியிட்டு 44 தொகுதிகளில் மட்டுமே வென்றது.

click me!