குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை அக்கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, முதல்வர் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீல் ஆகியோர் முன்னிலையில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
குஜராத்தில், அடுத்த ஐந்தாண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்பு வழங்குவது, அனைத்து மாணவிகளுக்கும் இலவசக் கல்வி, தீவிரவாத எதிர்ப்புக் குழு அமைப்பது என பல வாக்குறுதிகளை அறிக்கையில் அளித்துள்ளனர்.
தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, "அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் இந்திய எதிர்ப்பு சக்திகளின் ஸ்லீப்பர் செல்களைக் கண்டறிந்து ஒழிக்க தீவிரவாத எதிர்ப்புப் பிரிவை உருவாக்குவோம். குஜராத் பொது சிவில் சட்ட கமிட்டியின் பரிந்துரைகளை அப்படியே அமல்படுத்துவோம்.
மேலும், "பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது தொடர்பாகவும் சட்டம் இயற்றுவோம். பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகளின் சொத்துக்கள் மீட்கப்படுவது தொடர்பான சட்டம் இயற்றப்படும். அன்னிய நேரடி முதலீடு மூலம் குஜராத்தின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலருக்கு உயர்த்துவோம்'' என்றார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகளை காணலாம்:
* விவசாயிகளின் உள்கட்டமைப்புக்கு ரூ.10,000 கோடி
* அடுத்த 5 ஆண்டுகளில் குஜராத் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலை வாய்ப்பு
* அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு 1 லட்சம் அரசு வேலைகள்
* குஜராத்தில் பெண் மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயணம்
* கேஜி முதல் முதுகலை பட்டம் வரை அனைத்து மாணவிகளுக்கும் இலவச தரமான கல்வி
* குஜராத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்துதல்
* பாசன வசதிக்காக ரூ.25,000 கோடி
* தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் இரண்டு கடல் உணவு பூங்காக்கள்
માનનીય રાષ્ટ્રીય અધ્યક્ષ શ્રી જીએ ભારતીય જનતા પાર્ટીના સંકલ્પ પત્ર 2022નું વિમોચન કર્યું.
આ પ્રસંગે પ્રદેશ અધ્યક્ષ શ્રી અને મુખ્યમંત્રી શ્રી વિશેષ ઉપસ્થિત રહ્યાં. pic.twitter.com/h9ZaSOfxj2
* முதல் ப்ளூ பொருளாதார மண்டலம் அமைத்தல்
* மீன்பிடி உள்கட்டமைப்பில் தீவிர கவனம்
* 110 கோடி ரூபாய் மதிப்பில் இலவச முக்கியமந்திரி நோய் கண்டறிதல் திட்டம்
* மாநிலம் முழுவதையும் சுற்றி 3,000 கிமீ நீள வட்டப் பாதை அமைத்தல்
* மேற்கு இந்தியாவின் மிகப்பெரிய ஆன்மீக பூமியாக குஜ் நகரை நிறுவ, தேவபூமி துவாரகா மண்டலம் உருவாக்கப்படும்.
* கோயில்களை புதுப்பிக்கவும், விரிவுபடுத்தவும், மேம்படுத்தவும் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்படும்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கூறுகையில், "எங்களது தேர்தல் வாக்குறுதிகளை இன்று வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கடந்த இருபது ஆண்டுகளாக மக்களின் அன்பை பாஜக பெற்றுள்ளது. இது வெறும் பொய்யான வாக்குறுதிகள் மட்டுமல்ல, பிரதமர் மோடி வகுத்துள்ள வளர்ச்சி வரை படத்திற்கான எங்களது அர்ப்பணிப்பு. எங்களால் செய்ய முடியும் என்பதை மட்டுமே இங்கு வாக்குறுதிகளாக கொடுத்துள்ளோம். எங்களது ஆலோசனைகளை தீவிரமாக எடுத்துக் கொண்டு, செயல்படுத்துவோம் என்ற வாக்குறுதி வழங்குகிறேன்'' என்றார்.
182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி அறிவிக்கப்படும்.